இரவில் வீட்டில் உறங்கியபோது தீ விபத்து.. பெண் பலி! செல்போன் சார்ஜர் காரணமா?
Fire Accident: அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அவர்களுக்கு தீ விபத்து நடந்ததே நீண்ட நேரத்திற்கு பின்னர் தான் தெரியவந்துள்ளது. உயிரை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்த அவர்களால் வீட்டில் இருந்தே வெளியேற முடியவில்லை.
சென்னை, அக்டோபர் 30: சென்னையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிகாலை நேரம் என்பதால் வீட்டில் இருந்த அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர். இரண்டு படுக்கையறை கொண்ட அந்த வீட்டின் ஒரு அறையில் இருந்தே தீ பரவியுள்ளது. தொடர்ந்து வீடு முழுவதும் பரவிய நிலையில், குடும்பத்தினர் தப்பிச்செல்ல முடியாமல் தவித்துள்ளனர். அதிகாலையிலேயே நடந்த இச்சம்பவம் அப்பகுதியினரை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியது.
அதிகாலையில் வீடு முழுவதும் பரவிய தீ:
சென்னை வேளச்சேரி அடுத்த ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் மருத்துவர் ஆனந்த் என்பவர் குடியிருந்து வருகிறார். அவருடன், அவரது மனைவி சசிபாலா (55), அவர்களது மகன், மகள் ஆகிய 4 பேர் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல் இக்குடும்பத்தினர் நேற்றிரவு வீட்டில் தூங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை நேரம் என்பதால், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அவர்கள் தீ விபத்து ஏற்பட்டதை தொடக்கத்திலேயே கவனிக்கவில்லை எனத் தெரிகிறது. தொடர்ந்து, தீ வேகமாக பரவிய நிலையில், தூக்கத்தில் இருந்து எழுந்த அவர்கள் 4 பேரும் வீட்டிற்குள் இருந்து வெளியேற முயற்சித்துள்ளனர். எனினும், தீ ஹால் வரை பரவியதால், அவர்களால் வெளியேற முடியவில்லை எனத் தெரிகிறது. இதனால், பதறிய அவர்கள் பயத்தில் கூச்சலிட்டுள்ளனர்.
Also read: குடிநீர் புழுக்கள்.. 400க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – நாமக்கலில் பரபரப்பு
குளியலரையில் பதுங்கி உயிர்தப்பிய மூவர்:
இதையடுத்து, அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் அக்குடும்பத்தினரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், வீடு முழுவதும் தீ பரவியதால் அவர்களால் அருகில் செல்ல முடியவில்லை எனத் தெரிகிறது. தொடர்ந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்துள்ளனர் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை எனத் தெரிகறது. உடனடியாக அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். எனினும், வீட்டின் கதவுகள் உள் பக்கமாக பூட்டியிருந்ததால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை எனத் தெரிகிறது.
Also read: சென்னையில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார் – பரபரப்பு சம்பவம் – என்ன நடந்தது?
இதையடுத்து, வீட்டின் கதவுகளை உடைத்து அவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். அப்போது, வீட்டின் ஹாலில் சசிபாலா தீக்காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். வீட்டில் இருந்த மற்ற மூவரும் ஒரு படுக்கை அறைக்குள் சென்று அங்கிருந்த குளியலரையில் பதுங்கி இருந்துள்ளனர். எனினும், தீ அதிகமாக பரவியதால், அங்கிருந்து அவர்கள் மூவரையும் மீட்பது சிரமமாக இருந்துள்ளது.
தொடர்ந்து, குளியலரையின் ஜன்னல் பகுதியை உடைத்து தீயணைப்பு படையினர் அவர்கள் மூவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த தீ விபத்து நடந்ததால் அந்த வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளது. நல்வாய்ப்பாக அடுக்குமாடி குடியிருப்பின் மற்ற வீடுகளுக்கு இந்த தீ பரவாமல் இருந்துள்ளது. தொடர்ந்து, காயங்களுடன் இருந்த சசிபாலாவை மீட்டு மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். எனினும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்பது வீட்டிலேயே தெரிந்துள்ளது. தொடர்ந்து, பிரதே பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பப்பட்டுள்ளது.
செல்போன் சார்ஜர் காரணமா?
இந்த தீ விபத்து சம்பவமானது எப்படி நேர்ந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் ஏசியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதா, அல்லது இரவு முழுவதும் செல்போன் சார்ஜ் போடப்பட்டிருந்ததா, அல்லது வீட்டில் வேறு எதுவும் மின்கசிவு ஏற்பட்டுள்ளதா என்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவமானது ஆதம்பாக்கம் பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.