Post Office: லெட்டர் எழுதுங்க.. ரூ.50 ஆயிரம் பரிசு வெல்லுங்க!
மக்களிடையே குறைந்து வரும் கடிதம் எழுதும் பழக்கத்தை மீண்டும் ஊக்குவிக்கும் வகையில் அஞ்சல் அலுவலகம் சார்பில் கடிதம் எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. எனது முன்மாதிரிக்கு கடிதம் என்ற தலைப்பில் டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் கடிதம் எழுதி சென்னையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு,செப்டம்பர் 26: இந்திய அஞ்சல் துறை சார்பில் நடைபெறும் தேசிய அளவில் போட்டி செப்டம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் எட்டாம் தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து வயதினரும் பங்கு பெறலாம் என்ற நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ச்சியாக அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்தியாவின் தகவல் தொடர்பில் அஞ்சல் துறையின் பங்கு என்பது அளப்பறியது. நகரம் தொடங்கி பேருந்து போக்குவரத்து கூட இல்லாத கிராமம் வரை அஞ்சல் சேவை உள்ளது. பல தரப்பட்ட சேவைகளும் அஞ்சலில் வழங்கப்படுகிறது. மேலும் உள்ளூர், வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு பார்சல் சேவையும் இயங்கி வருகிறது.
ஆனால் தொலைத்தொடர்பு சாதனங்களும், சமூக வலைத்தளங்களும் பெருகி விட்ட நிலையில் இன்று அஞ்சல் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுகுறைவாக சுருங்கி விட்டது என சொல்லலாம். குறிப்பாக இந்த இளம் தலைமுறையினர் அஞ்சல் சேவையை பற்றி பெரிதும் அறியாமல் இருக்கிறார்கள். மூத்த குடிமக்கள் அஞ்சல் சேவையில் அளவுகடந்த நம்பிக்கை வைத்து அதன் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: 2026 பொங்களுக்கு ரூ.5,000 பரிசுத்தொகை வழங்கும் அரசு?.. தீயாக பரவும் தகவல்!




அஞ்சல் சேவையில் மிக முக்கிய இடத்தைப் பிடித்த கடிதப் போக்குவரத்து என்பது இன்றைய காலக்கட்டத்தில் சுருங்கி விட்டது. அதனை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறும் இந்த போட்டியானது 18 வயதிற்கு உட்பட்டவர்கள் அதற்கு மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக நடைபெறுகின்றது.
ஒரு ஏ4 பேப்பரில் ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமலும் அல்லது இன்லேண்ட் கடிதத்தில் 500 வார்த்தைகள் குறையாமலும் எழுத வேண்டும். இவ்வாறு எழுதிய கடிதத்தை தலைமை தபால் அலுவலர், தமிழ்நாடு வட்டம், சென்னை-600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த கடிதங்கள் தேசிய போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும். டிசம்பர் 8 ஆம் தேதிக்கு பின் அனுப்பப்படும் கடித்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமேசான் Vs பிளிப்கார்ட் சேல்.. ரூ.10,000-க்கு கீழ் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!
இந்த கடிதத்தை “எனது முன்மாதிரிக்கு கடிதம் (Letter to My Role Model)” என்ற தலைப்பில் எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி பயில்பவர்கள், பணி செய்பவர்கள் என பலரும் பங்கு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை
தேசிய அளவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாநில அளவில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம், இரண்டாவது இடம் பெற்றால் ரூ.10 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்பவர்கள் தங்கள் கடிதத்தில் நான், 2025 ஜனவரி 1ம் தேதியின்படி, 18 வயதிற்கு கீழே அல்லது அதற்கு மேலே வயதில் இருக்கிறேன் என்ற வயது சான்று கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.