ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சி பதவி பறிப்பு.. பகுஜன் சமாஜ் அறிவிப்பு
Tamil Nadu Bahujan Samaj Party: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். குடும்பத்தை கவனித்து கொள்ளவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதில் கவனம் செலுத்தும் வகையிலும் பதவி விலக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
சென்னை, ஏப்ரல் 15: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி (Porkodi Armstorng) இனி கட்சி பணியில் ஈடுபட மாட்டார் என்றும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தனது குழந்தையையும் குடும்பத்தையும் மட்டுமே இனி கவனித்துக் கொள்வார் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி (bahujan samaj party) அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் எனவும் பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்.
ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சி பதவி பறிப்பு
இவர் 2024ஆம் ஆண்டு மிக கொடூரமாக முறையில் பட்டப்பகலில் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது. ஒரு தேசிய கட்சியைச் சேர்ந்த மாநில தலைவர் கொலை செய்யப்பட்டது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்வி எழுப்பியது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி முயன்று வருகிறார்.
ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்ததும், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை கட்சி மேலிடம் நியமித்தது.
பகுஜன் சமாஜ் அறிவிப்பு
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கம்
பொற்கொடி இனி கட்சிப் பதவிகளில் ஈடுபட மாட்டார் எனவும், மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள் செயல்பட வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தல்#BSP pic.twitter.com/qfcw3RiXNF
— எம். சின்னத்தம்பி (@cinnattampi) April 15, 2025
இந்த நிலையில், பொற்கொடி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவராக உள்ள ஆனந்தன் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக 500க்கும் மேற்பட்ட கட்சி பிரதிநிதிகளை சந்தித்து புகார் கொடுத்தார்.
கட்சி தலைவர் மீது பொற்கோடி புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, அவரை கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி நீக்கி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
அதில், “இதுகுறித்து அக்கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “தேசிய தலைவரின் உத்தரவின்படி, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தனது குழந்தையையும், குடும்பத்தையும் மட்டுமே கவனித்து கொள்வார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதில் கவனம் செலுத்துவார். அவர் கட்சியில் பணியில் ஈடுபட மாட்டார்” என குறிப்பிட்டு இருந்தது.