பொங்கல் பரிசு 2027: இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் நெசவாளர்களுக்கு கூலி உயர்வு! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
Pongal - Free Dhoti And Saree: ஏற்கனவே இத்திட்டத்திற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக ரூ.13.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் செலவினத்தை நடப்பு நிதியாண்டின் வரவு-செலவுத் திட்டத்தில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து மேற்கொள்ள கைத்தறி இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 17, 2026: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2027-ஆம் ஆண்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி, சேலைகளைத் தயாரிக்கும் நெசவாளர்களுக்கு கூலியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய ரக வேட்டி, சேலைகளைத் தயாரிப்பதற்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ரூ.13.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் புதிய ரக வேட்டி, சேலை!
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் இலவச வேட்டி, சேலைகளுடன் பச்சரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகின்றன.
மேலும் படிக்க: அரிய நோயால் போராடும் 8 மாதக் குழந்தை.. உதவ முன்வந்த முதல்வர் விஜய்.. கோவை ரோடு ஷோவில் நடந்த உருக்கமான சந்திப்பு!!
அந்த வகையில், 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய ரக வேட்டி, சேலைகளை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு 2026 டிசம்பர் மாதம் வரை உற்பத்தி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
நெசவாளர்களின் கோரிக்கை ஏற்பு!
புதிய ரக வேட்டி, சேலைகளைத் தயாரிப்பதற்கான செலவுகள் அதிகரித்துள்ளதால், அதற்கேற்ப நெசவுக் கூலியையும் உயர்த்தி வழங்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக, வேட்டியின் நீளம் இரண்டு மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றங்கள், நூல் விலை உயர்வு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு கூலியை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் படிக்க: அதிமுகவில் தொடரும் உட்கட்சி மோதல்! சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் 100 பேரின் பதவிகளை பறித்த எடப்பாடி பழனிசாமி
இதையடுத்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் ஐந்து பேர் கொண்ட கூலி நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று நெசவாளர்களிடம் கருத்துகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் கூலியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எந்த ரக வேட்டி, சேலைக்கு எவ்வளவு கூலி?
ஏற்கனவே இத்திட்டத்திற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக ரூ.13.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் செலவினத்தை நடப்பு நிதியாண்டின் வரவு-செலவுத் திட்டத்தில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து மேற்கொள்ள கைத்தறி இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய கூலி விவரங்கள் பின்வருமாறு:
| தயாரிப்பு வகை | நெசவுக் கூலி | முந்தைய பணிகளுக்கான கூலி | மொத்தக் கூலி |
| பெடல் தறி சேலை | 97.72 | 28.00 | 125.72 |
| பெடல் தறி வேட்டி | 36.99 | 13.00 | 49.99 |
| விசைத்தறி சேலை | 45.76 | 9.05 | 59.81 |
| விசைத்தறி வேட்டி | 19.04 | 4.30 | 23.34 |
நெசவாளர்கள் மத்தியில் வரவேற்பு
நூல் விலை உயர்வு மற்றும் வாழ்வாதாரச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசின் இந்தக் கூலி உயர்வு அறிவிப்பு நெசவாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2027 பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தியை மேற்கொள்ளும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.