அதிமுகவில் தொடரும் உட்கட்சி மோதல்! சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் 100 பேரின் பதவிகளை பறித்த எடப்பாடி பழனிசாமி
ADMK Internal Rift: கடந்த ஜூலை மாதத்திலும் சி.வி சண்முகத்தின் ஆதரவாளர்கள் சிலரின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டது. தற்போது அடுத்தகட்ட நடவடிக்கையாக, விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி சண்முகம் சார்ந்துள்ள மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியச் செயலாளர்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 17, 2026: அதிமுகவில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரின் கட்சிப் பதவிகளைப் பறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். ஏற்கனவே சிவி சண்முகத்தின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது ஆதரவாளர்கள் மீதும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் வெடிக்கும் உட்கட்சி மோதல்:
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கட்சியின் எதிர்காலம் குறித்து ஆலோசித்து வருகின்றனர். பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்றிணைத்தால் மட்டுமே அதிமுகவை மீட்டெடுக்க முடியும் என்றும், பொதுக்குழுவைக் கூட்டி தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: அரிய நோயால் போராடும் 8 மாதக் குழந்தை.. உதவ முன்வந்த முதல்வர் விஜய்.. கோவை ரோடு ஷோவில் நடந்த உருக்கமான சந்திப்பு!!
ஆனால், இந்தக் கோரிக்கைகளுக்கு எடப்பாடி பழனிசாமி செவிசாய்க்கவில்லை என்ற அதிருப்தி கட்சிக்குள் நிலவி வருகிறது. இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த சிவி சண்முகம், எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசியிருந்தார். இதையடுத்து, சி.வி சண்முகத்திற்குப் பதிலாக விழுப்புரம் மாவட்டச் செயலாளராக பசுபதியை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இடைத்தேர்தலிலும் படுதோல்வியடைந்த அதிமுக:
இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி சண்முகம் தலைமையில் ஒரு அணியும், மாவட்டச் செயலாளர் பசுபதி தலைமையில் மற்றொரு அணியும் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றன. அவ்வப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.
சமீபத்தில் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களிலும் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீண்டும் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மேலும் படிக்க: சென்னையில் விடிய விடிய மழை.. இன்று 6 மாவட்டங்களுக்கு ஆர்ஞ்சு அலர்ட்.. வானிலை ரிப்போர்ட்..
அனைவரும் ஒன்றிணையும் நேரம்:
இதற்கிடையே, அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு அக்டோபர் 16-ஆம் தேதி தொண்டர்களுக்கு மடல் எழுதிய எடப்பாடி பழனிசாமி, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அதே நாளில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி. வேலுமணியும், எடப்பாடி பழனிசாமி மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் 100 பேரின் கட்சி பதவி பறிப்பு:
இந்தச் சூழலில், கடந்த ஜூலை மாதத்திலும் சி.வி சண்முகத்தின் ஆதரவாளர்கள் சிலரின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டது. தற்போது அடுத்தகட்ட நடவடிக்கையாக, விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி சண்முகம் சார்ந்துள்ள மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியச் செயலாளர்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
ஒருபுறம் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வரும் நிலையில், மறுபுறம் அவருக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வரும் சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அதிமுகவில் உட்கட்சி மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதுடன், தேர்தல் தோல்விகளால் ஏற்கனவே அதிருப்தியில் உள்ள தொண்டர்கள் மத்தியிலும் சலசலப்பு அதிகரித்துள்ளது.