பட்டப்பகலில் பயங்கரம்… பாமக பிரமுகரை அடித்தே கொன்ற மர்ம கும்பல்.. செங்கல்பட்டில் சம்பவம்
Chengalpattu PMK Functionary Murder : செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாமக பிரமுகரான வாசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாமக பிரமுகர் கொலை
செங்கல்பட்டு,செப்டம்பர் 17 : செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாமக பிரமுகரான வாசுவை, மர்ம கும்பலால் கல்லால் தாக்கி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு பகுதியச் சேர்ந்தவர் வாசு (53). இவர் பாமக மாவட்ட துணைச் செயலாளராகவும், காட்டங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவர் பெட்ரோல் பங்க், குடிநீர் விநியோகம் போன்றவற்றை அவர் செய்து வந்தார். இந்த நிலையில், 2025 செப்டம்பர் 16ஆம் தேதியான நேற்று தனது ஓட்டுநர் மற்றும் நண்பருடன் இளந்தோப்பு பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறு அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், மூன்று பேர் மீதும் கல்லை எடுத்து வீசி தாக்கியுள்ளனர்.
பின்னர், பாமக பிரமுகர் வாசுவை சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும், வாசுவின் மீது கல்லை தூக்கிப் போட்டுள்ளனர். பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து, இதற்கிடையில், வாசுவின் ஒட்டுநர், நண்பர் இருவரும் அங்கிருந்து ரத்த காயங்களுடன் தப்பிச் சென்றனர். உடனே செங்கல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த பாமக பிரமுகர் வாசுவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வாசுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
Also Read : நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞர் கொடூர தாக்குதல்.. ஒருவர் பலி
பாமக பிரமுகர் அடித்து கொலை
இதனை அடுத்து, அவரது சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள், கைப்பேசி அழைப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், பாமக பிரமுகரை கொலை செய்தவர் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பாகம பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து உண்மையான குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி செங்கல்பட்டு திண்டிவனம் ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஜிஎஸ்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்டதற்கு, அன்புமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
Also Read : வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை அனுப்பிய கணவன்.. மனமுடைந்த மனைவி தற்கொலை!
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “செல்வாக்கு மிக்க ஒருவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடுகிறது என்றால் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஏ.வாசுவின் படுகொலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். ஏ.வாசுவின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.