தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடரும் சறுக்கல்…அன்புணி-ராமதாஸ் தூக்கிய போர்க்கொடி!
PMK Anbumani And Ramadoss In AIADMK BJP Alliance: தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி புதிய நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக பாஜக கூட்டணி வலுப்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயல் அண்மையில் தமிழக வந்திருந்தார். அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்து அதிமுக பாஜக கூட்டணி விவகாரம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பு, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவதற்காக ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம், பியூஸ் கோயல் வலியுறுத்தியதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி பாஜக சார்பில் அவர்களை கூட்டணியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதிமுக-பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு
மேலும், அதிமுகவுக்கு 170 தொகுதிகள், பாஜகவுக்கு 23 தொகுதிகள், ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுக்கு தலா 6 தொகுதிகள், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மற்றும் தனயன் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
மேலும் படிக்க: பருவம் தவறிய மழை.. விவசாயிகளை காப்பாற்ற ரூ.290 கோடி நிவாரணம்.. தமிழக அரசு அறிவிப்பு




அன்புமணி-ராமதாஸ் தூக்கிய போர்க்கொடி
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்றால் ராமதாஸ் இருக்கக் கூடாது என்று அன்புமணியும், அன்புமணி இருக்க கூடாது என்று ராமதாஸும் போர்க் கொடி தூக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் ஒரு சறுக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், ஏற்கனவே பிளவு பட்டு கிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பாஜக முயற்சித்து வருகிறது.
பாமகவை ஒன்றிணைக்கும் பணியில்…
இதில், பாட்டாளி மக்கள் கட்சியும் தந்தை, மகன் என இரு பிரிவாக இருப்பதால் அவர்களை ஒன்றிணைக்கும் பணியில் பாஜக மற்றும் அதிமுக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், இந்த பணியை அதிமுக மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பியூஸ் கோயல் வலியுறுத்தியுள்ளாராம். இதில், சொந்த கட்சியில் உள்கட்சி பூசல் நீடித்து வரும் நிலையில், அதிமுக இந்த முயற்சியை முன்னெடுக்குமா. அப்படியே முன்னெடுக்கும் பட்சத்தில் அதிமுகவின் பேச்சை பாமக கேட்குமா.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைவலி
பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளை ஏற்குமா என்பன போன்ற கேள்விகள் எழுகிறது. இதனை தீர்க்கும் பட்சத்தில் தான் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளதாக பார்க்கப்படும். சட்டமன்ற தேர்தலையும் இடையூறின்றி சந்திக்க முடியும். இல்லையெனில் கூட்டணியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும். மொத்தத்தில் இந்த விவகாரம் தேசிய ஜனநாயக கூட்டணக்கு மேலும் ஒரு தலைவலியாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: 100 நாள் வேலை திட்டத்தில் திமுக ஊழல் செய்ய முடியாது…நயினார் நாகேந்திரன்!