தமிழகத்தில் பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. கோழிப் பண்ணைகளை கண்காணிக்க உத்தரவு..
Bird Flu: நாமக்கல் உள்ளிட்ட கோழி பண்ணைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில், கால்நடை மருத்துவர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுடன் இணைந்து தொடர்ச்சியான கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோழி பண்ணைகளில் நோய் அறிகுறிகள் உள்ளதா, கோழிகள் அசாதாரணமாக இறக்கிறதா என்பதையும் உடனுக்குடன் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 25, 2025: கேரள மாநிலத்தின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் (Avian Influenza) பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதனுடைய எதிரொலியாக தமிழக – கேரள எல்லையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தமிழக எல்லை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில், கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கோழிகள், கோழி தீவனம், முட்டை, இறைச்சி போன்றவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்:
அதன்படி, கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. எல்லை பகுதிகளில் உள்ள கிராமங்கள் மற்றும் சந்தைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இந்த ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு OTP கட்டாயம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால், கேரளா சென்று திரும்பும் பக்தர்கள் மத்தியில் கூடுதல் கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் யாருக்கேனும் காணப்பட்டால், தாமதமின்றி அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என சுகாதாரத் துறை பரிந்துரைத்துள்ளது.
கோழி பண்ணைகளை கண்காணிக்க உத்தரவு:
மேலும், நாமக்கல் உள்ளிட்ட கோழி பண்ணைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில், கால்நடை மருத்துவர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுடன் இணைந்து தொடர்ச்சியான கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோழி பண்ணைகளில் நோய் அறிகுறிகள் உள்ளதா, கோழிகள் அசாதாரணமாக இறக்கிறதா என்பதையும் உடனுக்குடன் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழக வெற்றிக் கழகத்தில் ஓபிஎஸ்…உறுதி செய்த செங்கோட்டையன்?
கோழி பண்ணைகளில் உரிய தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறதா, சுகாதார நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதையும் உறுதிப்படுத்த அதிகாரிகள் உத்தரவிடப்பட்டுள்ளனர். மேலும், கோழி பண்ணைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறைச்சி வாங்குவதில் கூடுதல் கவனம் வேண்டும் என அறிவுறுத்தல்:
அதேபோல், இறைச்சிக் கடைகள் உயிரிழந்த அல்லது நோயுற்ற கோழிகளை வாங்கி விற்பனை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நம்பகமான இடங்களில் மட்டுமே கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக முக்கியமானவை என்பதால், பொதுமக்களும் அச்சமடையாமல், அரசு வழங்கும் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.