கோவை வரும் பிரதமர் நரேந்திர மோடி.. விவசாயிகளுக்கு ரூ. 18,000 கோடி நிதி.. பயணத்திட்டம் என்ன?
PM Modi Visit To Coimbatore: இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்த பின், பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுக்கு ரூ. 6,000 உதவித்தொகை வழங்கும் ‘பிஎம்-கிசான்’ திட்டத்தின் 21வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ. 18,000 கோடி உதவித்தொகையை வழங்குகிறார்.
கோவை, நவம்பர் 19, 2025: கோவையில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். கோவை கொடிசியா வளாகத்தில் இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெற உள்ள தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாடு நவம்பர் 19, 2025 முதல் தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.
இயற்கை வேளாண்மை மாநாடு – கோவை வரும் பிரதமர் மோடி:
இந்த மாநாட்டில் சுமார் 300 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பிராந்திய தேவைகள் மற்றும் வேளாண் காலநிலை மாறுபாடுகள் பற்றிய விரிவான தெளிவுகளை வழங்கும் வகையில் பல்வேறு கருத்தரங்கங்களும் நடைபெறும். இந்த மாநாட்டில் பங்கு பெறுவதற்காக ஆந்திர மாநிலம் புத்தபருத்தியிலிருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகிறார்.
மேலும் படிக்க: “ஆட்சியில் பங்கு வேண்டும்.. ஆனால் வேண்டாம்”… என்ன சொல்கிறது விசிக?
கோவை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன், அண்ணாமலை உள்ளிட்ட பலர் வரவேற்கின்றனர். பின்னர் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் அவர் கோவை கொடிசியா வளாகத்திற்கு காலை 11.30 மணியளவில் சென்றடைவார்.
பி.எம். கிசான் திட்டத்தின் 21 வது தவணை:
இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்த பின், பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுக்கு ரூ. 6,000 உதவித்தொகை வழங்கும் ‘பிஎம்-கிசான்’ திட்டத்தின் 21வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ. 18,000 கோடி உதவித்தொகையை வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து விவசாயிகள் மத்தியில் அவர் உரையாற்ற உள்ளார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தை சேர்ந்த 21,80,24 விவசாயிகள் பயனடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தமிழகத்தில் தற்போது வரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. சுகாதார துறை வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..
இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு சிறப்பு விருதுகளை வழங்குகிறார். அதேபோல் தென்னிந்தியாவைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் 50 பேருடன் அவர் கலந்துரையாடுகிறார். இயற்கை வேளாண்மையில் என்ன மாதிரியான புதிய வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, எதனை பின்பற்றலாம் என்பவை குறித்து அவர் விரிவாக பேச இருக்கிறார்.
கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:
இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிற்பகல் 3.30 மணிக்கு அவர் கோவை விமான நிலையத்திலிருந்து மீண்டும் டெல்லிக்கு தனி விமானம் மூலம் பயணம் மேற்கொள்கிறார். இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இயற்கை விவசாயிகள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.