முன்பகை காரணமாக கட்டையால் தாக்கிய மாணவர்கள் – பிளஸ் 2 மாணவர் பரிதாப மரணம் – அதிர்ச்சி தகவல்
Student assault death : பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவரை முன் பகை காரணமாக பிளஸ் 1 மாணவர்கள் தாக்கியதில், அந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 15 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மாதிரி புகைப்படம்
தஞ்சாவூர், டிசம்பர் 6: தஞ்சாவூர் (Thanjavur) மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் அரசுப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்கள் தாக்கியதில் பிளஸ் 2 மாணவர் பலத்த காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 6, 2025 அன்று உயிரிழந்தார். இந்த நிலையில், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் (Government School) பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரை தாக்கிய பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் மாணவர்கள் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்பகை காரணமாக நடந்த மோதல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பள்ளியில் அடிக்கடி மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 18, 2025 அன்று இந்த பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மற்றும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், பதினொன்றாம் வகுப்பு மாணவர் பலத்த காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிக்க : சாலைகளில் குழந்தைகளை வைத்து யாசகம்.. அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் இருவரது பெற்றோரையும் வரவழைத்த காவல்துறையினர், இருவரிடமும் இனி இதுபோல் நடந்துகொள்ளக்கூடாது சமாதானம் பேசி அனுப்பி வைத்திருக்கின்றனர். அதன் பிறகு இருவரும் வழக்கம் போல பள்ளி சென்று வந்திருக்கின்றனர்.
சிகிச்சை பலனின்றி பிளஸ் 2 மாணவர் மரணம்
இந்த நிலையில் தான் கடந்த டிசம்பர் 3, 2025 அன்று மீண்டும் இரண்டு மாணவர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதனயைடுத்து கடந்த டிசம்பர் 4, 2025 அன்று பள்ளி முடிந்ததும், துர்கையம்மன் கோவில் பின்புறம் பிளஸ் 1 மாணவர்கள் 15 பேர் காத்திருந்து, பிளஸ் 2 மாணவரை கடுமையாக தாக்கியிருக்கின்றனர். இதில் பலத்த காயமடைந்த பிளஸ் 2 மாணவரை தகவலறிந்து வந்த பெற்றோர், உடனடியாக மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிக்க : நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கார்கள்.. 5 பேர் பலியான நிலையில், 7 பேர் படுகாயம்!
இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், பிளஸ் 2 மாணவரை தாக்கிய 15 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிளஸ் 2 மாணவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 6, 2025 இன்று உயிரிழந்தார். பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.