Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பரபரப்பான நாகை கலெக்டர் ஆபீஸ்.. துப்பாக்கியால் சுட்டு பெண் காவலர் தற்கொலை

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த ஆயுதப்படை பெண் காவலர் அபிநயா தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு குறித்து நாகூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பரபரப்பான நாகை கலெக்டர் ஆபீஸ்.. துப்பாக்கியால் சுட்டு பெண் காவலர் தற்கொலை
பெண் காவலர் அபிநயா
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 26 May 2025 19:01 PM

நாகை, மே 26: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியில் நாகையண் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகளான அபிநயா, நாகை மாவட்ட ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். 29 வயதான அவர் 2025 மே 24ஆம் தேதி இரவு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூல அறை அமைந்துள்ள பகுதியில் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இப்படியான நிலையில் 2025 மே 25 அதிகாலை அபிநயா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பகுதியில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு இருந்த சக போலீஸ் அலுவலர்கள் பதறிப் போய் ஓடி சென்று என்ன நடந்தது என பார்த்துள்ளனர்.

அப்போது அங்கு அபிநயா குண்டு பாய்ந்து உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரிகளுக்கும், அபிநயாவின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை மாவட்ட எஸ்பி அருண் கபிலன் சக போலீசாரிடம் விசாரணை நடத்தினார். இதில் அபிநயா தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தற்கொலை தொடர்பாக விசாரணை

இதனை அடுத்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரித்து வருகின்றனர். அபிநயா தற்கொலைக்கு பணி அழுத்தம் காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

மேலும் அவரது செல்ஃபோன் உரையாடல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அபிநயா மருத்துவ விடுப்பில் சென்று இருந்த நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்புதான் பணிக்கு திரும்பி உள்ளார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடரும் சம்பவங்கள்

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை கிண்டி அருகே மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய காவலரை விசாரணைக்கு அழைத்த நிலையில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பணி அழுத்தம் காரணமாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது. தற்போது பெண் காவலர் தற்கொலை செய்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)