டெலிகிராம் லிங்கால் வந்த ஆப்பு! ஆன்லைன் மூலம் டிரேடிங் என பொய்.. தூத்துக்குடி பெண்ணிடம் ரூ. 6 லட்சம் அபேஸ்..
Cybercrime Arrest: தூத்துக்குடி பெண், டெலிகிராம் மூலம் கிடைத்த ஆன்லைன் வேலை வாய்ப்பு விளம்பரத்தை நம்பி, ரூ. 6 லட்சம் இழந்தார். 5 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கும் வேலை என்கிற பொய்யான வாக்குறுதியால் ஏமாற்றப்பட்டார். பின்னர் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் எனும் பொய்யில் மேலும் பணம் இழந்தார். சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர், கன்னியாகுமரியை சேர்ந்த மகேஷ் என்பவரை கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி, மே 26: உலகளவில் ஆன்லைன் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். இதன்மூலம், நாம் ஒவ்வொரு நாளும் எவ்வளவோ விஷயத்தை எளிதாக செய்கிறோம். சில சமயங்களில் ஆன்லைன் மூலம் நாம் ஒரு சில சிக்கல்களிலும் சிக்கி கொள்கிறோம். அந்தவகையில், தூத்துக்குடி (Thoothukudi) மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆன்லைன் மூலம் டிரேடிங் செய்து அதிக பணத்தினை லாபமாக பெறலாம் என்று கூறி டெலிகிராமில் (Telegram Link) லிங்கை மொபைல் எண்ணுக்கு அனுப்பி சுமார் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பணத்தை சுருட்டிய நபரை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது..?
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் நீண்ட காலமாக பகுதி நேரமாக வீட்டில் இருந்தபடியே வேலை ஏதாவது கிடைக்குமா என்று ஆன்லைன் வாயிலாக தேடி வந்துள்ளார். அப்போதுதான் சரியாக அவர் பயன்படுத்தி வந்த டெலிகிராம் ஆப்பில் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளது. இதனை கண்டு மகிழ்ச்சியடைந்த பெண் டெலிகிராமில் லிங்க் அனுப்பிய மர்ம நபர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அந்த நபர்கள் தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் இருக்கும் பிரபல ஹோட்டல்களிடம் நாம் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளோம். அந்த வகையில், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங்ஸ் மற்றும் நல்ல ரிவ்யூ கொடுப்பதன் மூலம் மாதத்திற்கு ஏராளமான பணம் சம்பாதிக்கலாம் என்று ஒரு லிங்கை அந்த பெண்ணிற்கு அனுப்பியுள்ளனர்.
ஏமாற்றம்:
இதனை நம்பிய அந்த பெண்ணும் தனக்கு வழங்கப்பட்ட லிஸ்டில் இடம்பெற்றுள்ள உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங்ஸ் கொடுத்து முதலில் ஆசையை தூண்டும் விதமாக ரூ. 3670 பணத்தை சம்பளமாக பெற்றுள்ளார். தொடர்ச்சியாக அந்த மர்ம நபர், இதேபோல் ஆன்லைன் டிரேடிங் மூலமும் அதிக பணத்தை பெறலாம் என்று ஆசையை காட்டி பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி டெலிகிராம் மூலம் மற்றொரு லிங்க் அனுப்பியுள்ளார். இதை நம்பிய அந்த பெண்ணும், அந்த டெலிகிராம் லிங்க்-ஐ கிளிக் செய்ததும், ஒரு இணையள பக்கத்திற்கு சென்றுள்ளது. அதில் கொடுக்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்தது மட்டுமின்றி, மொத்தமாக ரூ. 5,90,830 பணத்தை முதலீடு செய்துள்ளார்.
நீண்ட நாட்கள் ஆகியும் தனது வங்கி கணக்கு எந்த பணமும் வராததை கண்டு, சந்தேகம் அடைந்த பெண், அந்த மர்ம நபர்களை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அப்போது, மீண்டும் அந்த மர்மநபர் கூடுதலாக இன்னும் சிறிது பணத்தை கட்டினால் அதிக லாபத்தை எட்டலாம் என்று தொடர்ந்து வற்புறுத்தியுள்ளனர். அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், உடனடியாக National Cyber crime Reporting Portal புகார் செய்துள்ளார்.
மர்மநபர் கைது:
புகாரின் அடிப்படையில் உடனடியாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவை தொடர்ந்து, சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மேற்பார்வையில் விசாரணை வேகமாக தொடங்கியது. காவல்துறையினரின் விசாரணையில் இந்த பண மோசடி செய்தது கன்னியாகுமரியை அடுத்த திருப்பரப்பு பள்ளிமுக்கு பகுதியை சேர்ந்த 37 வயதான மகேஷ் மகேஷ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் மகேஷை கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.