AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாளையங்கோட்டையில் பயங்கரம்.. 2.5 வயது குழந்தையை தூக்கிலிட்டு தாயும் தற்கொலை.. என்ன காரணம்!

Tirunelveli Crime: திருநெல்வேலி மாவட்டத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மன அழுத்தத்தில் இருந்து வந்த நிலையில், தனது 2.5 வயது குழந்தையை தூக்கில் தொங்க விட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பாளையங்கோட்டையில் பயங்கரம்.. 2.5 வயது குழந்தையை தூக்கிலிட்டு தாயும் தற்கொலை.. என்ன காரணம்!
குழந்தையை தூக்கிலிட்டு தாயும் தற்கொலை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 31 Mar 2026 18:29 PM IST

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி தங்கம் ( 21 வயது). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கந்தசாமி- தங்கம் ஆகியோருக்கு திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே குடும்ப தகராறு காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதன் காரணமாக, கடந்த ஓராண்டுக்கு முன்பு தங்கம் தனது கணவருடன் கோபித்துக் கொண்டு நடுவக்குறிச்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கந்தசாமி மற்றும் தங்கம் இடையே விவாகரத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, தங்கம் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த தங்கம் தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளார்.

தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த தாய்- மகள்

அதன்படி, திடீரென தனது பெண் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டுள்ளார். பின்னர், அவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்றிருந்த தங்கத்தின் பெற்றோர் இரவில் வீடு திரும்பினர். அப்போது, அவர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றபோது, அறையில் தங்கம் மற்றும் அவரது 2.5 வயது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அலறல் சத்தம் போட்டு கதறி அழுதனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவர்களது வீட்டுக்கு திரண்டு வந்தனர்.

மேலும் படிக்க: தேனியில் 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்

பரிதாபமாக பிரிந்த இரு உயிர்கள்

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரையும் தூக்கில் இருந்து மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இருவரது சடலங்களும் உடல்கூறாய்வுக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நெல்லை ஆர். டி. ஓ. விசாரணை

இந்தச் சம்பவம் தொடர்பாக தங்கத்தின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கந்தசாமி மற்றும் தங்கத்துக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் நெல்லை ஆர். டி. ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார். 2.5 வயது குழந்தையுடன் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)

மேலும் படிக்க: பிரச்சாரத்தின்போது திடீரென தண்டவாளத்தில் படுத்த மன்சூர் அலிகான் – காரணம் இதுவா?

Follow Us