குடிசை வீட்டில் பற்றிய தீ.. அலறிய இரு உயிர்கள்.. சமையல் செய்த போது நிகழ்ந்த துயர சம்பவம்!
Pudukkottai Crime: புதுக்கோட்டை மாவட்டத்தில் சமையல் செய்த போது குடிசை வீட்டில் பற்றிய தீயில் சிக்கி 70 சதவீதம் தீக்காயம் அடைந்த தாய் மற்றும் மகள் ஆகியோர் சிகிச்சை பலன் இன்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்தில் தாய் - மகள் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சிவப்பிரகாசம் நகரை சேர்ந்தவர் அழகேசன். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு சங்கரி ( 13 வயது) உள்பட 2 மகள்கள் உள்ளார். அழகேசன் பித்தளை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சங்கரி புதுப்பட்டி அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்தார். மீனாட்சி கூலி தொழில் செய்து வந்தார். இவர்களது குடும்பம் ஏழ்மை காரணமாக அனைவரும் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், மீனாட்சி மற்றும் அவரது மகள் சங்கரி ஆகியோர் வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக குடிசையில் தீ பற்றியது. கடும் வெயிலின் தாக்கத்தின் காரணமாகவும், பலத்த காற்றின் காரணமாகவும் தீ மளமளவென வீடு முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.
தீ விபத்தில் சிக்கிய தாய்-மகள்
இதில், மீனாட்சி மற்றும் சங்கரி ஆகியோர் வீட்டின் உள்ளே மாட்டிக்கொண்டதுடன் அலறல் சத்தம் போட்டனர். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களை மீட்க முடியாமல் போனது. உடனே, பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர்.
மேலும் படிக்க: தவெக விசில் சின்னம் பொறித்த 3,926 பாத்திரங்கள் பறிமுதல்.. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தலைமறைவு.. போலீசார் வலைவீச்சு!
70 சதவீத காயமடைந்த இருவரும் அடுத்தடுத்து உயிரிழப்பு
பின்னர், தீ விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த மீனாட்சி மற்றும் சங்கரி ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆட்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் தீவிர சிகிச்சைக்காக பொன்னமராவதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, 70 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மீனாட்சி மற்றும் சங்ககிரி ஆகியோர் சிகிச்சை பலன் இன்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
இதை தொடர்ந்து, அவர்களது சடலங்களை உடல் கூராய்வுக்காக போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அழகேசன் அளித்த புகாரின் பேரில், பொன்னமராவதி காவல் நிலைய ஆய்வாளர் பத்மா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். சமையல் செய்த போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தாய் மற்றும் மகள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வெப்பநிலை.. எங்கெல்லாம் மழை இருக்கும்?