வேறுநபருடன் தொடர்பு.. திருப்பூரில் வடமாநில பெண் கொலை
Tirupur Crime News: திருப்பூரில் வசித்து வந்த வட மாநில தொழிலாளி கௌரங்கா மண்டல், மனைவி ரிங்கு மண்டலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரைக் கொலை செய்து தலைமறைவானார். நான்கு நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார். விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கௌரங்கா மண்டல்
திருப்பூர், செப்டம்பர் 24: திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளி குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின் போலீசாரால் கொல்கத்தாவின் அந்த நபர் கைது செய்யப்பட்டார். எதற்காக இந்த கொலை நடந்தது என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் பகுதியை சேர்ந்தவர் கௌரங்கா மண்டல். 37 வயதான இவர் தனது மனைவி ரிங்கு மண்டல் மற்றும் 7 வயது மகனுடன் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பண்டியாண்டி பாளையம் கணேஷ் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.
கௌரங்கா மண்டல் அப்பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனிடையே கடந்த வாரம் திடீரென ரிங்கு மண்டல் தனது மகனை மேற்கு வங்கத்தில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு அவர் மட்டும் தனியாக மீண்டும் காங்கேயம் திரும்பியுள்ளார். இப்படியான நிலையில் கௌரங்கா மற்றும் ரிங்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: காதல் விவகாரம்.. பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை.. திருச்செந்தூரில் அதிர்ச்சி
இதில் ஆத்திரமடைந்த கௌரங்கா மண்டல் ரிங்கு மண்டலின் கழுத்தை நெறித்தி கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காங்கேயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரிங்கு மண்டல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் ஆகியவை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் வெளி நபர்கள் வந்து சென்றதற்கான எந்த தடயமும் இல்லாத நிலையில் கௌரங்கா மண்டல்தான் கொலையில் ஈடுபட்டார் என கண்டறியப்பட்டது. மேலும் அவர் வீட்டில் இல்லாததும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் தப்பி ஓடிய கௌரங்கா மண்டலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொல்கத்தாவில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து கௌரவம் மண்டல் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: காதலியை மிரட்ட தற்கொலை செய்வதுபோல நடித்த இளைஞர் உயிரிழப்பு!
இதில் அவர் கொல்கத்தா ரயில் நிலையத்தில் பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற தனிப்படை போலீசார் கௌரங்கா மண்டலை கைது செய்தனர்.
அவரை காங்கேயம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டதில் உண்மை வெளிப்பட்டது. அதன்படி கடந்த ஆறு மாதங்களாகவே மனைவியின் ரிங்குவுக்கும், கௌரங்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இவர்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இப்படியான நிலையில் மேற்கு வங்காளத்தில் வேறு ஒரு இளைஞருடன் ரிங்கு குடும்பம் நடத்தி வந்ததாகவும், அந்த நபருடன் பிரச்சினை ஏற்பட்டதால் அவரை விட்டு பிரிந்து மீண்டும் கணவர் கௌரங்கா மண்டலை தேடி காங்கேயம் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஏற்கனவே இளைஞருடன் குடும்பம் நடத்தியதால் ஆத்திரத்தில் இருந்த கௌரங்கா தனது மனைவியை கொன்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.