14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பாதிரியாருக்கு 7 ஆண்டுகள் சிறை.. திருப்பூரில் ஷாக்..
Tiruppu Crime News: திருப்பூர் மாவட்டத்தில் காப்பகத்தில் தங்கி படித்து வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் செப்டம்பர் 9, 2025 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கைதான பாதிரியார் ஆண்ட்ரூஸிற்கு 7 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், செப்டம்பர் 10, 2025: திருப்பூர் மாவட்டத்தில் காப்பகத்தில் தங்கி படித்து வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பாதிரியாருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை அடுத்த ஊத்துக்குளி கவுண்டம்பாளையம், கூனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ். இவருக்கு வயது 50. இவர் பாதிரியாராக இருந்து வந்தார். ஆண்ட்ரூஸ் அப்பகுதியில் ஆதரவற்ற பள்ளி மாணவர்களுக்கான காப்பகம் நடத்தி வந்தார். தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளை இந்தக் காப்பகத்தில் தங்க வைத்து, அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் காப்பகத்தில் ஏராளமான ஆதரவற்ற குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர்.
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை:
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காப்பகத்தில் தங்கி இருந்த 14 வயது சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அந்தச் சிறுமி தனது சொந்த ஊருக்கு, அதாவது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில், 14 வயது சிறுமி தன்னிடம் பாதிரியாராக இருந்த ஆண்ட்ரூஸ் தவறாக நடந்து கொண்டதாகவும், தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் தாயிடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்தச் சிறுமியிடம் விரிவாகக் கேட்டபோது, பல நாட்களாக பாதிரியார் ஆண்ட்ரூஸ் தன்னிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை அம்பலப்படுத்தினார்.
மேலும் படிக்க: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் எங்கே பேசுகிறார்? அனுமதி வழங்கிய காவல் துறை..
பாதிரியாருக்கு 7 ஆண்டுகள் சிறை:
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் தாயார் சற்றும் தயங்காமல் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அந்த பாதிரியாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மேலும் படிக்க: காதலனுடன் ஹோட்டலில் இருந்த பெண்.. இறுதியில் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் அதிர்ச்சி
இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் செப்டம்பர் 9, 2025 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, காப்பகத்தில் தங்கி படித்து வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் ஆண்ட்ரூஸ்க்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும், ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்படுவதாகவும் நீதிபதி கோகிலா தீர்ப்பளித்தார்.