மனநோயாளியாக மாறிய சீமான்.. அண்ணா குறித்து அவதூறு பேச்சுக்கு சீமான் மீது குவியும் கண்டனங்கள்..
Political Leaders On Seeman: பேரறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் மீது நாகரீகமற்ற முறையில் கடுமையாக பேசியுள்ளார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் திமுக மாணவர் அணி செயலாளர் சீமான் மனநோயாளியாக மாறியுள்ளார் என விமர்சித்துள்ளார்.

செப்டம்பர் 27, 2025: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பேரறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆரை அவதூறாக பேசியதற்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. குறிப்பாக பல கட்சி தலைவர்கள், பிற கட்சிகளை விமர்சித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அண்ணா – எம்.ஜி.ஆரை சனியன் என சொன்ன சீமான்:
அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். செப்டம்பர் 26, 2025 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், “திமுகவிலிருந்து இரண்டு இட்லியும், அதிமுகவிலிருந்து இரண்டு தோசையும் எடுத்து ஒரே உப்புமாவாக கிண்டி இருக்கிறார் விஜய். இந்தப் பக்கம் அண்ணா.. இந்தப் பக்கம் எம்ஜிஆர்.. இதில் என்ன மாற்றம் வருகிறது? இது ஒரு சனியன், இது ஒரு சனியன். இரண்டு சனியனையும் சேர்த்து ஒரு சட்டை தைத்துக் கொண்டார். சனிக்கிழமை சனிக்கிழமை கிளம்பி விடுகிறார். அவருடைய வாயில் இருந்து இதுவரை ‘மாற்றம்’ என்ற சொல்லே வந்ததில்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.
சீமான் மீது அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்:
பேரறிஞர் பெருந்தகை அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் குறித்தான திரு சீமான் அவர்களின் அருவெறுக்கத்தக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – மறைந்த தலைவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான பேச்சை இனியும் தொடர்ந்தால் அதற்கான எதிர்வினைகள் மிகக்…
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 26, 2025
தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை விமர்சிக்கும் நோக்கில், பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்ஜிஆரை “சனியன்” என்று குறிப்பிட்டது, அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ அண்ணா மற்றும் எம்ஜிஆரை குறித்த சீமான் பேசிய அருவருக்கத்தக்க வார்த்தைகள் கடும் கண்டனத்திற்குரியது. சீமான் பேச்சு தமிழக மக்களின் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த தலைவர்கள் மீது இவ்வாறு பேசிப் பிரசாரம் செய்ய முயன்றால், அதன் எதிர்வினை தமிழக மக்களிடமிருந்து வரும் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: என் மீது இவ்வளவு நம்பிக்கையா? ஒருகை பாத்திடலாம் – கான்ஃபிடெண்டாக சொன்ன விஜய்..
சீமான் போல் எங்களுக்கும் பேச தெரியும் – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்:
சி.பா ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்திய பின்னர் பேசிய முன்னால் அமைச்சர் ஜெயகுமார், “மறைந்த தலைவர்கள் அண்ணா, எம்ஜிஆர் குறித்த விமர்சனங்களை தாங்க முடியாது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவரைவிட அதிகமாக நாங்களும் பேச தெரியும்” என எச்சரித்தார்.
மேலும் படிக்க: நடைமுறைக்கு சாத்தியமானது மட்டும் தான் சொல்வோம் – செய்வோம்.. நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம்
சீமான் ஒரு மனநோயாளி – ராஜீவ் காந்தி அறிக்கை:
“சீமான், பாஜகவின் அண்ணாமலை வழியில் அண்ணாவை விமர்சிக்கிறார். அண்ணா தமிழ்நாட்டின் சிற்பி. உலகப்புகழ் பெற்ற சிந்தனையாளர். அவருடைய பெயரைச் சொல்லக் கூட சீமான் தகுதியற்றவர். அண்ணாவைப் பற்றி விமர்சிக்க யாரும் துணிந்ததில்லை. துணிந்தவர்கள் அனைவரும் காணாமல் போனவர்கள். சீமான் மனநோயாளியாக மாறியுள்ளார். இனியும் அண்ணா மீது அவதூறு சொன்னால், திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் தங்களது பதிலைக் கொடுப்பார்கள்” என கடுமையாக கண்டித்தார்.