ஆலந்தூரில் அதிர்ச்சி.. ஹோட்டல் அறையில் தந்தை செய்த கொடூரம்.. உயிரிழந்த 7 வயது சிறுமி!
Chennai Crime News : சென்னை ஆலந்தூரில் உள்ள தனியார் ஹோட்டலில் 7 வயது சிறுமியை, அவரது தந்தை கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், அவருக்கு கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சென்னை, ஜூலை 22 : சென்னையில் 7 வயது சிறுமியை, அவரது தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளை கொன்ற நபர், தானும் கழுத்தறுத்து தற்கொலை முயன்றுள்ளது தெரியவந்துள்ளது. குடும்பத் தகராறில் இதுபோன்ற கொடூரத்தை அவர் செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை அயனாவரம் ஏகனாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (37). இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு ரெபேக்கா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஸ்டெஃபி ரோஸ் என்று 7 வயதில் மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார். சதீஷ் மின்னணு பொருட்களை விற்கும் கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், தம்பதி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அதில், பெண் ரெபேக்காவை, சதீஷ் தொடர்ந்து தாக்கி வந்துள்ளதாக தெரிகிறது.
இதனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு, ரெபேக்கா ஓட்டேரி காவல் நிலையத்தில் சதீஷ் மீது புகார் அளித்துள்ளார். தன்னை சதீஷ் உடல் ரீதியாகவும், தகாத வார்த்தைகளால் பேசிய துன்புறுத்துவதாகவும் கூறி புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து, சதீஷை காவல் நிலையத்திற்கு அழைத்து, எச்சரித்து பின்னர் அனுப்பி உள்ளனர். இந்த நிலையில், 2025 ஜூலை 19ஆம் தேதி இரவு மீண்டும் ரெபேக்கா மற்றும் சதீஷ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சதீஷ் தனது 7 வயது மகளுடன் வீட்டில் இருந்து வெளியேறி, ஆலந்தூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி இருக்கிறார்.
Also Read : திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் வெகுமதி..




ஹோட்டலில் அறையில் தந்தை செய்த கொடூரம்
இந்த நிலையில், 2025 ஜூலை 21ஆம் தேதியான நேற்று அதிகாலை 5 மணியளவில் தனது சகோதரி கெத்சியலுக்கு சதீஷ் போன் செய்துள்ளார். அப்போது, அவரிடம் மகள் ஸ்டெஃயின் கழுத்தை அறுத்து கொன்றதாகவும், தானும் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போவதாகவும் கூறி, போனை கட் செய்துள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த கெத்சியல் காலை 6.30 மணியளவில் ஹோட்டலுக்கு சென்றிருக்கிறார். அங்கு இதுகுறித்து ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து, வேறு சாவியை பயன்படுத்தி அறைக்கு சென்றுள்ளார். அப்போது, 7 வயது சிறுமி ஸ்டெஃபி படுக்கையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
அதற்கு அருகில் சதீஷ் கழுத்தை அறுத்த நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக பழவந்தாங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் சதீஷை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read : சென்னை: 100 கார்களை திருடி சொகுசு வாழ்க்கை… திறமையான எம்பிஏ பட்டதாரி திருடன் கைது!
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். இதற்கிடையில், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.