தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்.. அடுத்த மாநிலத் தலைவராகிறாரா சரத்குமார்? நயினாருக்கு மத்திய பொறுப்பு?
Tamil Nadu BJP: சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்ததைத் தொடர்ந்து, பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், தமிழக பாஜகவில் தலைமை மாற்றம் ஏற்பட்டால் அவருக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அக்டோபர் 15, 2026: தமிழக பாஜகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார், தமிழக பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதேசமயம், தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மத்திய அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
தேர்தல் தோல்வியால் எழுந்த கேள்விகள்
2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் என அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் பாஜகவால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அப்போதைய மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் தலைமையில் பாஜக நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், அதற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் கட்சியின் செயல்பாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
மேலும் படிக்க: தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கிய மக்கள் தொகை கணக்கெடுப்பு.. வீடு வீடாகச் சென்று விவரங்களை சேகரிக்கும் பணிகள் தீவிரம்!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலையில், தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.
எல். முருகன் ராஜினாமா.. புதிய பொறுப்பு யாருக்கு?
மத்திய இணையமைச்சராக இருந்த எல். முருகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு தலைவருக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அந்தப் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் அல்லது பாஜகவின் மூத்த பெண் நிர்வாகிகளில் ஒருவர் பரிசீலிக்கப்படலாம் எனக் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சரத்குமாருக்கு வாய்ப்பு கிடைக்குமா?
சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்ததைத் தொடர்ந்து, பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், தமிழக பாஜகவில் தலைமை மாற்றம் ஏற்பட்டால் அவருக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: தமிழக ஆளுநர் அர்லேகரை நேரில் சந்திக்கும் முதல்வர் விஜய்.. என்ன காரணம்?
அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில ஆண்டுகள் உள்ள நிலையில், தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்தவும் தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கவும் பாஜக மேலிடம் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மாநிலத் தலைவர் மாற்றம் மற்றும் மத்திய அமைச்சரவைப் பொறுப்பு தொடர்பான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.