கலையரசன் விவகாரம்.. முதல்வர் மன்னிப்பு கேட்டது தவறுக்கு பொறுப்பேற்பது ஆகாது.. உயர்நீதிமன்றம் சாட்டையடி!
HC Slams Police Over Economist Kalaiarasan harassment: பொருளாதார நிபுணர் கலையரசன் விவகாரத்தில் முதலமைச்சர் மன்னிப்பு கேட்டது நிகழ்ந்த தவறுக்கு பொறுப்பேற்பது ஆகாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அரசியல் பேச்சுகளைத் தண்டிப்பதற்காகக் கைது நடவடிக்கைகளைப் பயன்படுத்தக் கூடாது எனவும் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
சென்னை, நவ.03: தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய பொருளாதார நிபுணர் கலையரசன் விசாரணை என்ற பெயரில் காவல்துறை மூலம் அலைக்கழிக்கப்பட்ட விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்பட்ட புகாரின் பேரில், திமுக கவுன்சிலர் சுதா மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சுதா தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கு வயது 60 ஆவதாகவும், முதலமைச்சர் குறித்த பேச்சுக்காக அவர் ஏற்கனவே தனது வருத்தத்தைத் தெரிவித்துவிட்டதாகவும் சுதா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையும் படிக்க: சிறைச்சாலைகளில் தொடரும் பாதுகாப்பு குறைபாடுகள்.. முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழு.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!
நீதிபதி எழுப்பிய கடுமையான கேள்வி:
இருதரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த நீதிபதி ரமேஷ், அரசியல் உள்நோக்கத்துடன் காவல்துறையை ஏவி விடுவது குறித்துக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார். மனுதாரர் அவதூறாகப் பேசியிருந்தால் அதற்குரிய அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் முறையான வழக்கு தொடரலாமே தவிர, அதைவிட்டுவிட்டு அரசியல் உள்நோக்கத்துடன் இதர கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுப்பது சட்ட நடைமுறைகளைத் தாண்டிச் செல்வதற்குச் சமம் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், சில நாட்களுக்கு முன்பு பிரபல பொருளாதார நிபுணர் கலையரசன் அதிகாலை வேளையில் சாதாரண உடையில் வந்த போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்ட நீதிபதி, அவருக்கு எதிராக எந்தவிதமான புகாரோ அல்லது முதல் தகவல் அறிக்கையோ (FIR) இல்லாத நிலையிலும் அவர் பல மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட விவகாரத்தை மையமாக வைத்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
முதலமைச்சரின் மன்னிப்பும் பொறுப்பேற்பும்:
பொருளாதார ஆய்வாளர் கலையரசன் விவகாரத்தில் அமைச்சர் ஒருவர் பகிரங்கமாகத் தங்களின் தவறை ஒப்புக்கொண்டதையும், அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் சம்பந்தப்பட்டவரைத் தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்துப் பேசியதையும் சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மன்னிப்பு கேட்டார் என்பதற்காக அது நிகழ்ந்த சட்டவிரோதத் தவறுக்குப் முழுப் பொறுப்பேற்பதாகக் கருத முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அரசியல் ரீதியிலான விமர்சனங்களையும் பேச்சுகளையும் தண்டிக்கும் ஆயுதமாகத் காவல்துறையின் கைது நடவடிக்கைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும், விமர்சனங்கள் கடுமையானதாக இருந்தாலும் அரசியலில் அவற்றுக்கென்று தற்காப்புப் பாதுகாப்பு உண்டு என்பதையும் நீதிமன்றம் அழுத்தமாக நினைவூட்டியது.
இதையும் படிக்க: தமிழக அரசின் தீபாவளி கிஃப்ட்.. கூட்டுறவு- போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
அதிகாரத்தில் உள்ளோரின் சகிப்புத்தன்மை:
அரசு உயர் பதவிகளில் வகிப்பவர்களும் அரசியல் தலைவர்களும் பொதுவெளியில் வைக்கப்படும் விமர்சனங்களையும் கருத்துக்களையும் எதிர்கொள்ளும் அளவிலான சகிப்புத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் அறிவுறுத்தினார். கருத்துரிமை மற்றும் அரசியல் விமர்சனங்களின் வரம்புகள் குறித்து விரிவான கருத்துக்களைத் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் தொடர்புடைய மனுதாரர் சுதாவுக்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடியான தீர்ப்பும் கருத்துக்களும் தமிழக அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.