சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு கண்டனம்.. தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி இன்று ஆர்ப்பாட்டம்!!
DMK Alliance Stages Protests: மும்மொழிக் கொள்கையைத் திணித்துத் தமிழ் மொழியைப் புறக்கணிக்க முயல்வது. இப்படித் தமிழகத்தைப் புறக்கணிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதே இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகரங்கள், ஒன்றியங்கள் மற்றும் பேரூர்களில் இப்போராட்டம் நடைபெறுகிறது.

கோப்புப் புகைப்படம்
சென்னை, மார்ச் 15: நாடு முழுவதும் நிலவும் சமையல் மற்றும் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டைக் கையாளத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, தமிழகத்தில் இன்று (மார்ச் 15) திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கின்றன. மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததே இந்த எரிவாயு தட்டுப்பாட்டிற்கு காரணம் என்று திமுக கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதோடு, சிறு மற்றும் குறு தொழில்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் படிக்க: பாசி பிடித்த தண்ணீர் கேன் விற்றால் ரூ.5,000 அபராதம்: கடும் எச்சரிக்கை
மக்கள் அச்சத்தை மத்திய அரசு போக்கவில்லை:
எரிவாயு தட்டுப்பாடு குறித்துத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியும், இதுவரை உரியத் தீர்வு கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கவோ அல்லது பொதுமக்களின் அச்சத்தைப் போக்கவோ மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்பது இப்போராட்டத்தின் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. எரிவாயு விவகாரம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு முடக்கி வருவதாகக் கூட்டணிக் கட்சிகள் சாடியுள்ளன.
புறக்கணிக்கப்படும் கோரிக்கைகள்:
கல்வி, 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கான நிதியை விடுவிக்காமல் இருப்பது. மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் பணிகள், ஓசூர் விமான நிலையத் திட்டம் போன்றவற்றுக்கு அனுமதி வழங்காமல் முட்டுக்கட்டை போடுவது. மும்மொழிக் கொள்கையைத் திணித்துத் தமிழ் மொழியைப் புறக்கணிக்க முயல்வது. இப்படித் தமிழகத்தைப் புறக்கணிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதே இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்.
தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகரங்கள், ஒன்றியங்கள் மற்றும் பேரூர்களில் இன்று காலை 10.30 மணியளவில் இப்போராட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகப் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசின் ‘வஞ்சகப் போக்கிற்கு’ எதிராகத் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்யப் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கல்லூரி பேருந்து மீது ரயில் மோதி விபத்து – கரூர் அருகே பரபரப்பு
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பவர்கள் விவரம்:
இதனிடையே, திமுக சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிழக்கு – அமைச்சர் சேகர்பாபு, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை வடக்கு- இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன், சென்னை மேற்கு- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, சென்னை தெற்கு- அமைச்சர் மா.சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சென்னை மேற்கு- தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சென்னை தென்மேற்கு- மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், சென்னை வடகிழக்கு- எஸ்.டி.பி.ஐ. தலைவர் நெல்லை முபாரக், காஞ்சீபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகின்றனர்.