வங்கக் கடலில் உருவாகும் தாழ்வு பகுதி…பொங்கல் அன்று மழைக்கு வாய்ப்பா?வானிலை ஆய்வு மையம் கூறுவதென்ன!
Low Pressure Forming In Bay Of Bengal: வங்க கடல் பகுதியில் ஜன.6-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் 2- ஆவது வாரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொங்கள் அன்று மழை பெய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வட கிழக்கு பருவ மழை காலமாகும். இந்த காலக் கட்டத்தில் பெய்யும் பருவ மழை தான் அனைத்து மாவட்டங்களுக்கும் முக்கிய நீராதாரமாகும். கடந்த 2025- ஆம் ஆண்டு, இலங்கைக்கு அருகே உருவான டிட்வா புயல் தமிழகப் பகுதியில் கடந்து சென்ற போது, பரவலாக மழை பொழிவு இருந்தது. இருந்தாலும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த மழைப் பொழிவானது இயல்பை விட 3 சதவீதம் அளவுக்கு குறைவாகவே வடகிழக்கு பருவ மழை பெய்துள்ளது. அதன்பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. அவ்வப்போது, வெயில் தலை காட்டி வந்தது. இந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 1) இரவு திடீரென கன மழை பெய்தது. இந்த மழை 2- ஆவது வாரம் வரை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்க கடலில் வரும் ஜனவரி 6- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால், தென் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஜனவரி 2- ஆவது வாரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தற்போது, குமரி கடல்- லட்சத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
மேலும் படிக்க: பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம் எப்போது..கூட்டுறவுத் துறை முக்கிய அறிவிப்பு!




தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
இதே போல, இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதன் காரணமாகவே, நேற்று வியாழக்கிழமை ( ஜனவரி 1) முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதே போல, இன்று (வெள்ளிக்கிழமை), நாளை ( சனிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலாக மாற வாய்ப்பு உள்ளதா- பொங்கலுக்கு மழை பெய்யுமா
தற்போது, வங்கக்கடல் பகுதியில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு குறைவு எனவும், இது புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஜனவரி 2-ஆவது வாரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.
மேலும் படிக்க: நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்களின் கவனத்துக்கு…மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை திடீர் ரத்து!