Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜிஎஸ்டி வரி மாற்றம்.. மதுபானங்களின் விலை உயர வாய்ப்பு!

GST Reforms: ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பால், பேக்கேஜிங் மற்றும் போக்குவரத்து சேவைகளுக்கான வரி அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகம் மதுபான விலையை உயர்த்த ஆலோசனை செய்கிறது. மதுபானம் ஜிஎஸ்டி வளையத்திற்கு வெளியே இருந்தாலும், அதனுடன் தொடர்புடைய செலவு அதிகரிப்பு காரணமாக விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஜிஎஸ்டி வரி மாற்றம்.. மதுபானங்களின் விலை உயர வாய்ப்பு!
மதுபான விலை உயர்வு
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 24 Sep 2025 10:43 AM IST

தமிழ்நாடு, செப்டம்பர் 24: ஜிஎஸ்டி மறுசீரமைப்பு வரிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இது மது பிரியர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில், தற்போது அனைத்து வகையான மதுபானங்களுக்கும் கலால் வரி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வரியான வாட் ஆகியவை அரசால் விதிக்கப்படுகிறது. ஆனால் ஜிஎஸ்டி திருத்தப்பட்ட வரி விதிப்பின் மூலம் பேக்கேஜிங் சேவைகளுக்கு அதிக வரிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகம் மதுபானங்களின் விலையை உயர்த்துவது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.

மதுபானம் ஜிஎஸ்டி வளையத்திற்கு வெளியே இருந்தாலும் புதிய வரி தொடர்பாக ஏற்படும் செலவுகள் காரணமாக இந்த விலை ஏற்றம் நிகழக்கூடும் என சொல்லப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் மாற்றி அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதில் சிகரெட், புகையிலை, சர்க்கரை  பானங்கள் போன்ற பொருட்கள் 40 சதவீதம் வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் கூடுதல் ரூ.10 வசூலிக்கப்படுவது ஏன்? – அமைச்சர் முத்துசாமி விளக்கம்!

இதில் மதுபானம் இடம்பெறவில்லை என்றாலும் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பானங்கள் போன்ற பேக்கேஜிங் பொருள்கள் கீழ் வருவதால் தற்போது இதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 12 முதல் 15 சதவீதம் ஜிஎஸ்டி அமலில் இருந்த நிலையில் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் போக்குவரத்து சேவைகளுக்கும் 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

இந்த விலை உயர்வு சில்லறை வணிகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.  எனினும் தீவிர பரிசீலனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது. மதுபான உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்தப்படும் நிலையில் அதனை உற்பத்தியாளர்கள் மாற்று வழி மூலம் பெற முடியாது என்பதால் இதனை தவிர்க்க மதுபானங்களின் விலை உயர்த்தப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடைசியாக 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. அதற்கு முன் 2023 ஜூலையில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியானது. இப்படியான நிலையில் தற்போது மாற்றியமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மீண்டும் மதுபானங்களின் விலை உயர மிகப்பெரிய அளவில் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு: டாஸ்மாக் கடையால் பிரச்னையா? ஒரு புகார் போதும்.. 30 நாட்களில் நடவடிக்கை

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 4,787 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 302 வகை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2024 – 2025 ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.48,344 கோடி வருமானம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.