தமிழகத்தில் ஆளுநர் இருப்பதையே மறந்து விட்டோம்… அமைச்சர் ரகுபதி!
Law Minister Ragupathi Press Meet: மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்த கருத்துக்கு, அப்படி ஒரு ஆளுநர் இருப்பதையே மறந்து விட்டதாக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆளுநர் இருப்பதை மறந்து விட்டோம்
தமிழகத்தில் ஆளுநர் என்ற ஒருவர் இருப்பதையே நாங்கள் மறந்து விட்டதாக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணி குறித்து தலைவர் மு. க. ஸ்டாலின் முடிவு செய்வார். தற்போது, உள்ள கூட்டணி அப்படியே தொடரும். திமுக கூட்டணியில் கூடுதலாக வரும் கட்சிகளை எப்படி ஏற்பது என்பது குறித்து கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் முடிவு செய்வார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ச. ராமதாஸ் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் சில கருத்துக்களை கூறியுள்ளார். இதே போல தான் தற்போதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். இதனால், அவர் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு வரப்போகிறார் என்று அர்த்தம் கிடையாது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கும் திமுக
இது கூட்டணிக்கான அச்சாரமும் கிடையாது. கூட்டணி என்பது வேறு, பாராட்டுதல் என்பது வேறாகும். இந்தியாவில் நீதிமன்றத்திற்கு வானளாவிய அதிகாரம் உள்ளது. எனவே, அந்த அதிகாரத்தையும், நீதிமன்றத்தின் தீர்ப்பையும் திராவிட முன்னேற்ற கழகம் மதிக்கிறது. எனவே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை அமர்வு ஒரு தீர்ப்பை அளித்திருக்கும் நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை உள்ளது.
மேலும் படிக்க: 16வது நாளாக நீடிக்கும் போராட்டம்.. ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்.. சென்னையில் பரபரப்பு!!
தமிழகத்தில் ஆளுநர் இருப்பதை மறந்து விட்டோம்
அதில், தற்போதைய தீர்ப்பளித்த நீதிபதியின் தவறுகளை சுட்டிக் காண்பித்து உச்ச நீதிமன்றத்தில் அந்த தவறுகள் திருத்தப்பட்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்று முறையிடலாம். மதுரை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் அச்சுறுத்திய வரலாறு கிடையாது என்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, தமிழகத்தில் அப்படி ஒரு ஆளுநர் இருக்கிறார் என்பதையே நாங்கள் மறந்து விட்டோம். அவர், திடீரென்று டெல்லிக்கு சென்று விட்டு, தமிழகம் திறந்து ஏதாவது ஒரு கதையை விட்டுக் கொண்டிருப்பார்.
ஆசிரியர் காலிப் பணியிடங்கள்…
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர். என். ரவி எந்த மாதிரியான முறையில் நடந்து கொள்கிறார் என்பதை தமிழகம் பார்க்க போகிறது. கடந்த 2021- ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது என்பதை மானிய கோரிக்கையில் தெரிவித்துள்ளோம். அரசுப் பள்ளிகளில் எவ்வளவு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.
200- க்கும் மேற்பட்ட தொகுதியில் வெற்றி
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலியாக உள்ள பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வில்லை என்று கூறுவது மிக மிக தவறாகும். வரும் சட்டமன்ற தேர்தலில் 200- க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: தவெக கட்சி நிகழ்ச்சிகள் திடீர் ஒத்தி வைப்பு?அப்செட்டில் விஜய்…என்ன காரணம்!