Electricity Bill: தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி பில்.. ஷாக் அடித்த மின் கட்டணம்!
Tirunelveli: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளிக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம் வந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள், தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மனிதப் பிழையால் இது ஏற்பட்டதாகக் கூறி, தவறை சரிசெய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி, செப்டம்பர் 5: திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிலாளி ஒருவர் வீட்டுக்கு மின் கட்டணம் ரூ.1.61 கோடி வந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி மின்வாரிய உப கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மருதகுளம் என்ற கிராமம் உள்ளது. இங்கு மாரியப்பன் என்ற தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்வாரிய அலுவலர் மின் கணக்கீடு செய்வதற்காக வந்தார். தற்சமயம் மின் கணக்கீடு செய்யப்பட்டு அதற்கான கட்டணம் செல்போனில் குறுந்தகவலாக வந்து விடுகிறது. அந்த வகையில் மாதாந்திர மின் கட்டண விபரம் மாரியப்பனின் பதிவு செய்யப்பட்ட செல்போனுக்கு வந்துள்ளது.
இந்த மாதம் நாம் எவ்வளவு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என அவர் தனது செல்போனில் உள்ள குறுந்தகவலை ஆய்வு செய்தபோது கடும் அதிர்ச்சியடைந்தார். அதில் மின் கட்டணமாக ரூ.1,61,31, 281 என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாறியப்பனும் அவரது குடும்பத்தினரும் ஒரு நடுத்தர குடும்பம் மின்சாரத்திற்கு இவ்வளவு பெரிய தொகை கட்ட வேண்டுமா என கேள்வி எழுப்பினர். மேலும் அவ்வளவு பெரிய தொகையை தான் கண்ணால் கூட பார்த்தது இல்லை என கூறினர்.
Also Read: ஆத்தாடி.. 2 மாதத்திற்கு ரூ.91,993 மின் கட்டணம்.. ஷாக்கான சென்னை குடும்பம்!




தவறை கண்டறிந்த அதிகாரிகள்
உடனடியாக மாரியப்பன் மூலைக்கரைப்பட்டி மின்வாரியர் அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டார். இதனை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு மற்றும் மனித பிழை காரணமாக இது நிகழ்ந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் தவறு சரி செய்யப்பட்டு சரியான கட்டணம் பதிவேற்றப்படும் எனவும் உறுதியளித்தார்கள். அதன்படி மின் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது.
Also Read: மாதாந்திர மின் கட்டணம் எப்போது? அமைச்சர் சிவசங்கர் சொன்ன குட் நியூஸ்!
மின்வாரியத்தில் ஏகப்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. பணியாளர்கள் பற்றாக்குறையால் அவுட்சோர்சிங் ஊழியர்கள் மூலம் மின் கணக்கீடு செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது. அப்போது ஏற்பட்ட தவறின் காரணமாக இந்த குளறுபடி நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட மின் மீட்டரில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான அளவு கணக்கீடு செய்யும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தொடர் கோரிக்கை
தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது. இதனை மாதம் ஒரு முறை என்ற விதத்தில் மாற்ற அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்திலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதே சமயம் மின் கணக்கீடு தொடர்பான விலை பட்டியலை வெளிப்படையாக அறிவிக்கும்போது மக்களுக்கு ஏற்படுகின்ற குளறுபடிகளை தவிர்க்க முடியும் என பொதுமக்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.