Kanchipuram: ஆண் நண்பருடன் திட்டம் போட்டு வீட்டில் திருட்டு.. சிக்கிய பெண்!
Kanchipuram Crime News: குன்றத்தூர் அருகே ராஜேந்திரன் என்பவரது வீட்டில் அவரது மனைவி அபிதா மற்றும் அம்மா வள்ளியம்மாள் ஆகியோரை கட்டிப்போட்டு விட்டு 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால், விசாரணையில் அபிதாவின் ஆண் நண்பர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அபிதா தனது கணவர் வேலைக்கு சென்ற நேரத்தை பயன்படுத்தி அபிதா திட்டமிட்டு கொள்ளையை நடத்தியுள்ளார்.

காஞ்சிபுரம், செப்டம்பர் 4: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் இரு பெண்களை கட்டி போட்டுவிட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக இது ஒரு திட்டமிட்ட நிகழ்வு என தெரிய வந்துள்ளது. குன்றத்தூர் அருகே உள்ள காந்தி சாலை மணிகண்டன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் பொழிச்சலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவர் தனது தாய் வள்ளியம்மாள் மற்றும் மனைவி அபிதா ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் 2025 ஆகஸ்ட் 31ம் தேதி வேலை நிமித்தமாக ராஜேந்திரன் திருமண மண்டபத்தில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது வீட்டில் அவரது மனைவி மற்றும் அம்மா மற்றும் தனியாக இருந்துள்ளனர்.
வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்
இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் இரவு 10:30 மணி அளவில் காம்பவுண்ட் சுவர் ஏரி குறித்து உள்ளே சென்றுள்ளார். வீட்டின் கதவு திறந்திருந்த நிலையில் உள்ளே நுழைந்த அந்த மர்ம நபர் அபிதாவை முகத்தில் ஓங்கி குத்தி நிலைகுலைய செய்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே அபிதா மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற மர்ம நபர் அங்கிருந்த ராஜேந்திரனின் அம்மா வள்ளியம்மாளை தாக்கியுள்ளார்.
Also Read: செங்கல்பட்டில் ஷாக் சம்பவம்.. பிரபல தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை!




அவரை கட்டிப்போட்டு அவர் கழுத்தில் அணிந்து இருந்த சுமார் 7 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் 4 சவரன் மதிப்புள்ள வளையல்கள் என 11 சவரன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் வள்ளியம்மாளை சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு குன்றத்தூர் போலீசார் வந்தனர். கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை ஆய்வு செய்தனர் மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பிச்சென்ற மர்ம நபரை தேடி வந்தனர்.
ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்
இப்படியான நிலையில் இந்த திருட்டு சம்பவத்தில் அபிதாவின் ஆண் நண்பர் ஒருவர் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அபிதாவுக்கு திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாகவும், அந்த நபரை அடிக்கடி அருகில் உள்ள கோயில் ஒன்றில் சந்தித்து பேசியதாகவும் போலீசார் கண்டறிந்தனர். மேலும் தனது மாமியாரிடம் நிறைய நகைகள் இருப்பதாகவும், தனது கணவர் எப்போது வெளியே செல்வார் என்பது குறித்த தகவலை அந்த நபரிடம் அபிதா தெரிவித்துள்ளார்.
Also Read: மதுபான கடையில் தொடர் கொள்ளை.. காரணம் கேட்டு ஷாக்கான போலீசார்!
திருட வரும்போது சந்தேகத்தை தவிர்க்க தன்னையும் கட்டிப் போடுமாறு தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்த வந்தபோது வள்ளியம்மாளுக்கு மட்டும் காயம் இருந்த நிலையில் அபிதாவுக்கு பெரிய அளவில் காயம் இல்லாததை கண்டு சந்தேகமடைந்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் வாக்குமூலம் முரண்பாடாக இருந்ததையும் கண்டறிந்ததால் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் அபிதா தனது ஆண் நண்பருடன் பேசியது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அபிலாவை கைது செய்த போலீசார் அவரது ஆண் நண்பரை தீவிரமாக தேடி வருகின்றனர்.