“எங்களிடம் 30 லட்சம் வாக்குகள் உள்ளது”.. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கொதிப்பு!!

Teachers protest: 2018ல் எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவளித்தார். 2021ல், திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த முரண்பாடு களையப்படும் என்றும் கூறியிருந்தார். திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 311ல் இது குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை எதுவும் நடக்கவில்லை.

எங்களிடம் 30 லட்சம் வாக்குகள் உள்ளது.. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கொதிப்பு!!

தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்

Updated On: 

03 Jan 2026 07:54 AM

 IST

சென்னை, ஜனவரி 03: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கொலை குற்றவாளிகளை நடத்துவது போல, கைகளை உடைக்க போலீசார் முயற்சிப்பதாக இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம், 16 ஆண்டுகளாக நீடிக்கும் ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க சங்கத்தினர் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 8 நாட்களாக அவர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபடுவதும், போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்வதும், பின்னர் மாலையில் தொலை தூரங்களில் கொண்டு சென்று விடுவதுமாக இருந்து வருகிறது. எனினும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கங்கள் இம்முறை விடப்பாடியாக இருந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ஹேப்பி நியூஸ்! பொங்கலை முன்னிட்டு இலவச வேட்டி சேலை எப்போது? அமைச்சர் மகிழ்ச்சியான தகவல்

8வது நாளாக தொடரும் போராட்டத்தில் கைது:

அந்த வகையில், சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு 8வது நாளாக நேற்று இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 2 மணி நேரம் போராடிய நிலையில், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். ஆசிரியர்களின் போராட்டத்தால் ஆட்சியர் அலுவலகம் நேற்று போர்க்கள பூமியாக காட்சியளித்தது. மேலும், போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

திருமண மண்டபங்களில் அடைத்து வைப்பு:

போலீசார் கைது செய்யும் போது ஒரு பெண் ஆசிரியை மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனே அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். கைதான ஆசிரியர்கள் செம்பியம், வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டு, பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

கிடைக்கும் இடத்தில் போராட்டம்:

முன்னதாக, இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் நிருபர்களிடம் கூறும்போது, போராட்டம் நடத்த அரசு இடம் கொடுக்காததால் ஆங்காங்கே கிடைக்கும் இடத்தில் போராட்டம் நடத்துகிறோம். அமைதியாக போராடும் எங்கள் மீது போலீசார் மிக கடுமையான அடக்குமுறைகளை கையாள்கின்றனர். நேற்று நடந்த போராட்டத்தின் போது போலீசார் எங்களை அடித்து துன்புறுத்தினர்.

எங்களிடம் 30 லட்சம் வாக்குகள்:

கொலை குற்றவாளிகளை நடத்துவது போல ஆசிரியர், ஆசிரியைகளின் கைகளை உடைக்க போலீசார் முயற்சிக்கிறார்கள். எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு மாதத்திற்கு ரூ.10 கோடி தான் செலவாகும். எங்களிடம் 30 லட்சம் ஓட்டுகள் உள்ளது. எங்கள் போராட்டத்தால் பாதிக்கப்படும் பள்ளி மாணவ செல்வங்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

ஆசிரியர்கள் போராட்டம் ஏன்?

கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்பட்டது. ஆனால், அதே ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் மட்டுமே வழங்கப்பட்டது. தொடக்கத்தில் இந்த ஊதிய முரண்பாடு ரூ.3,170 என்று இருந்த நிலையில், இப்போது ரூ.16,000 என்கிற அளவில் மாறியிருக்கிறது.

இதையும் படிக்க : பொங்கல் பரிசு ரொக்கம்… ரூ.3 ஆயிரமா அல்லது ரூ.4 ஆயிரமா? விரைவில் அறிவிப்பு!

இந்த ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று, ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 2018ல் எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவளித்தார். 2021ல், திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த முரண்பாடு களையப்படும் என்றும் கூறியிருந்தார். திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 311ல் இது குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை எதுவும் நடக்கவில்லை.

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கடைசி நாள்.. யாருக்கு இது கட்டாயமில்லை?
துரந்தர் 2 இன்னும் பயங்கரமாக இருக்கும்.... - ராம் கோபால் வர்மா சர்ப்ரைஸ் தகவல்
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பில் சந்தேகம் - உத்தப்பாவின் பேச்சால் சர்ச்சை
தோனியின் காரில் இருந்த சிகரெட் பாக்ஸ் - வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி