பேட்டரி வெடித்ததால் நேர்ந்த விபரீதம்.. உடல் கருகி தம்பதி பலி.. ஆற்காட்டில் சோகம்!
Ranipet Fire Accident: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஐஸ்கிரீம் தயார் செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கணவன் - மனைவி இருவரும் உயிரிழந்தனர். கடையில் இருந்த பேட்டரி வெடித்த காரணத்தால் இந்த தீ விபத்து நிகழ்ந்தது விசாரணையில் தெரிய வந்தது.

ஐஸ்கிரீம் கடை தீ விபத்தில் தம்பதி பலி
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியில் உள்ள தேவி நகரில் ஐஸ்கிரீம் தயார் செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இன்று திங்கள் கிழமை ( ஏப்ரல் 13) எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையின் ஒரு பகுதியில் பற்றிய தீ மெல்ல மெல்ல கடை முழுவதும் பரவி தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் கடையின் ஷட்டர் மூடப்பட்டிருந்ததால் அதன் உள்ளே ஒரு பெண் உள்பட இருவர் சிக்கி இருந்தனர். தீ விபத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கடையில் உள்ளே இருந்து கரும் புகை வெளியேறத் தொடங்கியது. மேலும், தீயின் தாக்கம் தாங்க முடியாமல் கடையின் உள்ளே சிக்கி இருந்த இருவரும் அலறல் சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள் ஐஸ்கிரீம் கடையின் உள்ளே சிக்கி இருக்கும் இருவரை மீட்க முயன்றனர். ஆனால், கடையின் ஷட்டர் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் அவர்களை மீட்க முடியாமல் போனது.
உடல் கருகிய நிலையில் உயிரிழந்த கணவன் மனைவி
பின்னர், இது குறித்து ஆற்காடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், ஐஸ்கிரீம் கடையின் இரும்பு ஷட்டரை உடைத்து உள்ளே சிக்கி இருந்த இருவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டனர். இதில், இருவரும் தீயில் உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் படிக்க: தைரியமிருந்தால் கடிதத்தை வெளியிடுங்கள்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி சவால்!
90 சதவீதத்து மேல் தீக்காயம் அடைந்த தம்பதி
அங்கு, அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த சிறிது நேரத்திலேயே இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஐஸ்கிரீம் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் கடையில் உள்ளே மூண்ட புகையின் காரணமாக இருவரும் மூச்சு திணறல் ஏற்பட்டும், 90 சதவீதத்துக்கும் மேல் தீ காயம் ஏற்பட்டு உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஆற்காடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேட்டரி வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்து
இதில், உயிரிழந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவன்லால் மற்றும் அவரது மனைவி சுந்தரி என்பதும் தெரிய வந்தது. மேலும், கடையின் உள்ளே இருவரும் ஐஸ் கிரீம் தயாரிப்பதற்காக பேட்டரி வாகனத்தில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தனர். அப்போது, பேட்டரி வாகனத்தின் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இதில், ஏற்பட்ட தீ விபத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது
மேலும் படிக்க: ராமதாஸ் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவர் கொடுத்த அப்டேட்.. அடுத்த 2 நாட்கள் மிக முக்கியம்!