அரியலூர் அருகே மதுபோதையில் ஊர்க்காவல்படை வீரர் அடித்துக் கொலை.. ரோந்துப் பணியின் போது அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!
Home Guard Personnel Beaten to Death: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மது அருந்தியதைக் தட்டிக் கேட்ட ஊர்க்காவல்படை வீரர் வெங்கடேசன் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர், நவ.01: அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தலவாய் கிராமத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் காவலர் ராஜா கண்ணா மற்றும் ஊர்க்காவல்படை வீரர் வெங்கடேசன் ஆகியோர் கடந்த 30-ஆம் தேதி நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் சுடுகாடு அருகே சிலுப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மதிவானன், தாமரைக்கண்ணன் மற்றும் இளம்பருதி ஆகிய மூவரும் பொதுமடத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருப்பதை அவர்கள் கவனித்தனர். பொதுவெளியில் முறையற்ற செயல்களில் ஈடுபட்ட அந்த நபர்களைக் காவல் துறையினர் உடனடியாகக் கண்டித்து எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இருப்பினும், காவல்துறை மீது ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாக அந்த நபா்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனித்துள்ளனர்.
இதையும் படிக்க: மலைப்பாதையில் கோர விபத்து.. 100 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த லாரி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
ஊர்க்காவல்படை வீரர் மீதான கொடூரத் தாக்குதல்:
நள்ளிரவு ரோந்துப் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அதே நபர்கள் சற்று நேரம் கழித்து விநாயகர் கோயில் அருகே மீண்டும் ஒன்றிணைந்து மது அருந்தத் தொடங்கியுள்ளனர். இதனைக் கண்ட காவல்துறையினர் உடனடியாகச் சென்று மீண்டும் அவர்களைக் கண்டித்ததுடன், பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது எனத் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற அந்த மூவர் கொண்ட கும்பல், தங்களது செயலைக் கண்டித்த காவலர் ராஜா கண்ணா மீது திடீர் தாக்குதலைத் தொடுத்துள்ளது. இதனைக் கவனித்த ஊர்க்காவல்படை வீரர் வெங்கடேசன் தனது சக காவலரைக் காப்பாற்றவும், வன்முறையைத் தடுத்து நிறுத்தவும் உடனடியாக நடுவே புகுந்து தடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வெறி பிடித்த கும்பல் ஊர்க்காவல்படை வீரர் வெங்கடேசன் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியதில், அவரது முகத்திலும் தலையிலும் பலத்த அடிகள் விழுந்து அவர் அங்கேயே மயங்கிச் சரிந்து விழுந்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்:
உடலில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ஊர்க்காவல்படை வீரர் வெங்கடேசன் மற்றும் காவலர் ராஜா கண்ணா ஆகிய இருவரையும் உடன் வந்த சக காவலர்கள் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், வெங்கடேசனுக்குத் தலையில் ஏற்பட்ட பலத்த உள் காயங்கள் காரணமாக மேல் சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்குத் தீவிரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சைகளை அளித்து வந்தனர். இதற்கிடையில், தாக்குதலில் ஈடுபட்ட மதிவானன், தாமரைக்கண்ணன் மற்றும் இளம்பருதி ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், தஞ்சாவூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த ஊர்க்காவல்படை வீரர் வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிக்க: சென்னையில் அதிகாலையில் கோர விபத்து.. வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தூங்கிக்கொண்டிருந்த பெண் உடல் கருகிப் பலி!
கிராமத்தில் நிலவும் பதற்றம்:
பணியின் போது சமூக விரோதிகளால் ஊர்க்காவல்படை வீரர் அடித்துக் கொல்லப்பட்ட இந்தத் துயரச் செய்தி அவரது சொந்த ஊரான நக்கம்பாடி கிராமத்தை மீளாத் துயரத்திலும் கடும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல்படை வீரர்களுக்கு எதிராக இது போன்ற கொடூரத் தாக்குதல்கள் அதிகரித்துவருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தவிதத் தயவுதாட்சண்யமும் இன்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. கடமையைச் செய்யச் சென்ற இடத்தில் உயிரை இழந்த ஊர்க்காவல்படை வீரரின் குடும்பத்திற்கு உரிய நீதி வழங்கப்படுவதோடு, அரசு தரப்பில் தகுந்த நிவாரணமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.