ரயிலில் தள்ளி மாணவி கொலை: “இது அரிதிலும் அரிதான வழக்கல்ல”.. குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு!
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரெயிலில் தள்ளி கொன்ற சதீஷுக்கு, மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. அதோடு, சதீஷுக்கு 20 ஆண்டுகள் எந்தவித தண்டனைக் குறைப்பும் வழங்கக்கூடாது என கூடுதலாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை, நவம்பர் 28: ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சதிஷூக்கு, விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த கல்லூரி மாணவியும், அதே குடியிருப்பைச் சேர்ந்த சதீஷும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, குடும்பத்தினர் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அம்மாணவி, சதீஷுடன் பேசுவதை நிறுத்தியிருந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சதீஷ், 2022 அக்டோபர் 13-ஆம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த மாணவியை மின்சார ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.
இதையும் படிக்க: “செங்கோட்டையன் பின்னால் பாஜக இல்லை”.. நயினார் நாகேந்திரன் பளீர்!
தூக்கு தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்:
இந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சதீஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, விசாரணை முடிந்ததையடுத்து, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேயன்று சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதை உயர் நீதிமன்ற உறுதிப்படுத்தலுக்காக அனுப்பியது. இதே சமயம், சதீஷ் தரப்பும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.




திட்டமிட்ட கொலை அல்ல – சதிஷ் தரப்பு:
இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு விசாரித்தனர். சதீஷின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை அல்ல; காதலித்தவரை இழக்கும் மனவேதனையில் திடீரென ஏற்பட்ட ஆத்திரத்தின் விளைவு. எனவே இது அரிதிலும் அரிது வகையில் வரும் வழக்காக கருத முடியாது எனக் கூறி,மரண தண்டனை நீக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
திட்டமிட்ட கொலை தான் – அரசு தரப்பு:
மறுபுறம், சிபிசிஐடி தரப்பில் ஆஜரான தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகம்மது ஜின்னா, “இது திடீர் ஆத்திரத்தில் செய்த செயல் அல்ல; முற்றிலும் திட்டமிட்ட கொலை. மாணவியை இரண்டு நாட்கள் தொடர்ந்து கவனித்து, மூன்றாம் நாளன்று ரயில் வரும் நேரத்தைக் கணக்கிட்டு, ரயில் அருகில் வந்ததும் தள்ளிவிட்டது சிசிடிவி காட்சிகள் மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மரண தண்டனையைத் தொடர வேண்டும்” என வாதித்தார்.
இதையும் படிக்க : அதிமுகவை விட இரண்டரை மடங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளோம் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..
தண்டனை குறைப்பு:
இரு தரப்பின் வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று இறுதித் தீர்ப்பளித்த மேல் நீதிமன்றம், சதீஷுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை மாற்றி ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது. மேலும், குறைந்தது 20 ஆண்டுகள் எந்தவித தண்டனைக் குறைப்பும், சலுகையும் வழங்கக்கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது.