உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்!
சூர்யகாந்த் அடுத்த 15 மாதங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நீடிக்க உள்ளார். கடந்த அக்.30ம் தேதி அவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, சூர்யகாந்த் ஜனநாயகம் தொடர்பாக பல்வேறு முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
டெல்லி, நவம்பர் 24: உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று காலை பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக 2027 பிப்ரவரி 9ம் தேதி வரை பதவி வகிக்க உள்ளார். தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் நேற்று (நவ.23) மாலையுடன் ஓய்வு பெற்றார். இந்த விழாவில் பிரேசில், பூடான், கென்யா, மலேசியா, நேபாளம், இலங்கை, மொரிஷியஸ் நாடுகளை சேர்ந்த தலைமை நீதிபதிகள் பங்கேற்னர். முன்னதாக, கடந்த சனிக்கிழமை நடந்த விழா ஒன்றில் பேசிய சூர்யகாந்த், தனது பதவிக் காலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்றும், நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தேங்கி உள்ளதாக கூறியிருந்தார்.
இதையும் படிக்க : தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
சூர்யகாந்த் கடந்து வந்த பாதை:
ஹரியாணா மாநிலம், ஹிசாா் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூரியகாந்த். 1962 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி பிறந்த இவர், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் நீதிபதி சூா்ய காந்த் பணியாற்றி வந்தார். பின்னர், ஹிமாச்சலப்பிரதேச உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றாா். சட்டத்துறையில் தன்னுடைய திறமையும் நேர்மையும் காரணமாக, ஒரு சிறு நகரத்தில் வழக்குரைஞராக இருந்து நாட்டின் உயரிய நீதித்துறைப் பதவியை எட்டியுள்ளார்.
இதையும் படிக்க : ‘ஓயாத ரீல்ஸ் மோகம்’.. எச்சரிக்கையை மீறி திருச்செந்தூர் கோவிலில் நடனமாடிய இளைஞர்கள்!!
முக்கிய வழக்குகளில் தீர்ப்பு:
உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுகளில் இடம் பெற்றிருந்தார். மாநில சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் குறித்து ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் தொடர்பான சமீபத்திய வழக்கை விசாரிக்கும் அரசமைப்பு அமர்விலும் சூர்யகாந்த் இடம்பெற்றிருந்தார்.