Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்த 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Heavy Rain Alert: தமிழகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அருகிலுள்ள குமரிக்கடல் பகுதிகளில் மேலடுக்கு வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது இதனால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்த 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Nov 2025 06:35 AM IST

சென்னை, நவம்பர் 9: தமிழகத்தில் நவம்பர் 9, 2025  அன்று பல இடங்களில் மழை (Rain) பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி (Kanniyakumari) மாவட்டங்களில் ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,  மன்னார் வளைகுடா மற்றும் அருகிலுள்ள குமரிக்கடல் பகுதிகளில் மேலடுக்கு வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. அதேசமயம், தமிழகத்தின் உள்பகுதிகளிலும் கீழடுக்கு வளிமண்டலச் சுழற்சி காணப்படுகிறது. இதன் விளைவாக, நவம்பர் 9, 2025 அன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி மலைப்பகுதிகளில் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக சில இடங்களில் இரவு முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் தற்போது குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.

இதையும் படிக்க : 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ரிப்போர்ட்..

இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 தென் தமிழகத்தின் சில இடங்களில் நவம்பர் 10, 2025 நாளை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், நவம்பர் 11 மற்றும் 12, 2025 ஆகிய தேதிகளில் வடக்கு மற்றும் தென் தமிழகத்தின் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக நவம்பர் 12, 2025 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தின்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் மழை விவரம்

சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் நவம்பர் 9, 2025 அன்று வானம் பகுதியளவில் மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையைப் பொறுத்தவரை கனமழையை எதிர்பார்க்க முடியாது என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அடுத்தடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. நவ.15 பிறகு மீண்டும் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. வானிலை நிலவரம்..

கடந்த 24 மணிநேரத்தில் நவம்பர் 8, 2025 சனிக்கிழமை காலை 8.30 மணி வரை தமிழகத்தில் அதிகபட்சமாக 40 மில்லிமீட்டர் மழை  பதிவாகியுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக நல்ல மழை பதிவாகியுள்ளது.  மொத்தத்தில், தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான அளவில் மழை பெய்துள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் தென் மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.