அடுத்தடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. நவ.15 பிறகு மீண்டும் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. வானிலை நிலவரம்..
North East Monsoon: நவம்பர் மாதத்தில் எதிர்பார்த்ததை விட மழையின் அளவு குறைவாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில், நவம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம், நவம்பர் 7, 2025: வங்கக் கடலில் வரக்கூடிய நாட்களில் தொடர்ந்து இரண்டு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதிகள் உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அக்டோபர் மாத இறுதியில் மோன்தா புயல் உருவானது. இந்த மோன்தா புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் அதி கனமழை இல்லாமல் கனமழையும் அவ்வப்போது மிகக் கனமழையும் பதிவானது. அக்டோபர் மாதம் பொருத்தவரையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 58 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது.
மீண்டும் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை:
அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. அவ்வப்போது சில இடங்களில் மட்டும் மிதமான மழை பதிவாகி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது விட்டு விட்டு மிதமான முதல் கனமழை பதிவாகி வருகிறது. இதனால் வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்து காணப்படுகிறது.
மேலும் படிக்க: திருப்பூரில் 17 வயது சிறுமி கர்ப்பம்… தந்தையும் காதலனும் போக்சோவில் கைது – பரபரப்பு சம்பவம்
நவம்பர் மாதத்தில் எதிர்பார்த்ததை விட மழையின் அளவு குறைவாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில், நவம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
தற்போது தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நவம்பர் 7, 2025 (இன்று) ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: எஸ்ஐஆர் திட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் – திமுக அறிவிப்பு
அதேபோல் நவம்பர் 8, 2025 (நாளை) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 12, 2025 வரை தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழைக்கு மட்டும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பசலனம் காரணமாக மழை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பதிவாகக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தொடர் மழையின் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.