Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kanniyakumari: திருமண தடையை போக்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன் வழிபாடு!

கன்னியாகுமரியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயில், 108 சக்தி பீடங்களில் ஒன்றாகும். பாணாசுரனை வதம் செய்த சக்தி தேவியின் தவத்தின் விளைவாக இக்கோயிலானது உருவானதாக சொல்லப்படுகிறது. பகவதி அம்மன் கோயிலின் வரலாறு, சிறப்புகள் பற்றி நாம் காணலாம். மூன்று கடல்களும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கும் இக்கோயில் உலகப்புகழ் பெற்றது.

Kanniyakumari: திருமண தடையை போக்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன் வழிபாடு!
பகவதி அம்மன் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 18 Jun 2025 16:11 PM

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி ஒரு மிகச்சிறந்த சுற்றுலா தலம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்த இடத்திற்கு உள்ளூர் முதல் வெளிநாடு வரை ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். அப்படியாக கன்னியாகுமரி வரும் மக்கள் கடற்கரையை ஒட்டி இருக்கும் பகவதி அம்மன் கோயிலுக்கு செல்லாமல் வீடு திரும்புவதில்லை. பகவதி அம்மன் பெயரைக் கேட்டாலே ஒளி வீசக்கூடிய மூக்குத்தி அணிந்திருக்கும் அம்மன் என்பது தான் பலரின் கருத்தாக இருக்கும். பாடங்களிலும் அப்படித்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பகவதி அம்மன் கோயில் உருவான வரலாறு, அதன் சிறப்புகள் என்னென்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் நாம் காணலாம்.

இந்த பகவதி அம்மன் கோயில் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்திய பெருங்கடல் அரபிக்கடல் மற்றும் வங்காளவிரிகுடா ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கும் இந்த இடத்தில் அமைந்திருக்கும் 108 சக்தி பீடங்களில் ஒன்றான பகவதி அம்மன் கோயில் கன்னியாகுமரி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது கன்னி தெய்வம் என குறிப்பிடப்படுகிறது.

கோயில் உருவான வரலாறு

முன்பு காலத்தில் தேவர்களை அசுரர்கள் அடக்கி ஆண்ட போது அதர்மம் தலை தூக்கியது. இதனால் உலகில் தீமைகளும், பாவங்களும் பெருக தொடங்கியது. அநீதியான ஆட்சி நடந்தது. இதில் பாணாசுரன் என்ற அரக்கன் மூன்று உலகிற்கும் முடிவு தேடினான். அவனை ஒழிப்பதற்கு நிலமகள் திருமாலை வேண்டி நின்றாள். ஆனால் பராசக்தியால் மட்டுமே பாணாசூரனை கொள்ள முடியும் என திருமால் கூற தேவர்கள் பராசக்தியை வேண்டி பெரிய வேள்வி ஒன்றை நடத்தினர்.

இதன் முடிவில் வெளிப்பட்ட சக்திதேவி பாணாசுரன் தலைமையிலான அனைத்தையும் ஒழித்து இந்த உலகில் அறமும், ஒழுங்கும் நிலைபெற செய்வேன் என உறுதிமொழி தந்தாள். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வருகை தந்த தேவி கடும் தவம் புரிந்தாள். இதற்கிடையில் கன்னி தேவி மீது சுசீந்திரம் என்ற இடத்தில் கோயில் கொண்டிருந்த இறைவனான சிவபெருமான் காதல் கொண்டார். இருவருக்கும் திருமணம் நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் பாணாசூரன் ஒரு கன்னியால் கொல்லப்படுவான் என பிரம்மதேவன் எழுதிய விதி இந்த திருமணத்தால் கெட்டுவிடும் என உணர்ந்த நாரதர் இந்த நிகழ்வை தடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டார். அதன்படி பராசக்தியையும், சிவபெருமானையும் நேரில் சென்று சந்தித்து திருமணம் பற்றி மாற்று யோசனை கூறினார். அதன்படி ஒரு குறிப்பிட்ட நாளில் நள்ளிரவில் ஒரு நல்ல வேலையில் இந்த திருமணம் நிகழ வேண்டும் என நாரதர் தெரிவித்தார்.

அதன்படி சிவபெருமான் அந்தக் குறித்த நாளின் இரவில் நல்ல நேரம் தவறி விடக்கூடாது என சுசீந்திரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார். வழியில் வழுக்கம் பாறை என்ற இடத்தில் நாரதர் ஒரு சேவல் உருவம் கொண்டு கூவினார். இதனை பொழுது புலர்ந்து விட்டதென தவறுதலாக புரிந்து கொண்ட சிவபெருமான் நேரம் தவறிவிட்டது என நினைத்து மீண்டும் சுசீந்திரத்திற்கு வருத்தத்துடன் திரும்பி சென்றார். அதன் பின்னர் தேவியும் திருமணம் செய்யாமல் கன்னியாகவே இருப்பதாக முடிவு செய்து தவத்தை தொடர்ந்தாள்.

அவர்களின் திருமணத்துக்காக செய்யப்பட்ட உணவுகள் அனைத்தும் மணலாக மாறின. அதன் சான்றாகவே இன்றும் குமரி கடல் பகுதியில் அரிசி போன்ற வெண் சிறுமணலும், பல வண்ண மணலும் மிகுதியாக கிடைப்பதை காணலாம். இப்படியான நிலையில் தவமிருக்கும் தேவியை பற்றி அறிந்த பாணாசுரன் ஒரு நாள் நேரில் அவளை காண வந்தான். அவள் அழகை கண்டதும் மணந்து கொள்ள விரும்பினான். ஆனால் தேவி மறுத்து விடவே அசுரன் அவளை தன் வலிமையால் கவர்ந்து செல்ல எண்ணி தனது உடைவாளை உருவினான்.

இத்தகைய தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்த சக்தி தேவியும் அவனுடன் போரிட்டுக் கொன்றொழித்தாள். இப்படியாக சக்தி தேவியின் பக்தியை மெச்சும் பொருட்டு அவளுக்கு கோயில் எழுப்பி பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

கோயிலின் சிறப்புகள்

கன்னியாகுமரியின் கடலின் கிழக்கு பக்கமாக இரண்டு பெரிய பாறைகள் காணப்படுகிறது. அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற குறியீடு உள்ளது. இது பகவதி அம்மனின் திருப்பாதம் என பக்தர்கள் அழைக்கிறார்கள். விவேகானந்தர் 1892 ஆம் ஆண்டு தனது யாத்திரையின் போது கன்னியாகுமரிக்கு வந்து பகவதி அம்மனை வழிபட்டு பாறையில் உட்கார்ந்து தியானம் செய்த நினைவாக அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கடலின் அருகில் இருந்தாலும் கோயிலுக்குள் இருக்கும் கிணற்றில் நல்ல தண்ணீர் கிடைப்பது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் முதலில் கட்டப்பட்ட கோயில் கடலால் அடித்து செல்லப்பட்டது எனவும், தற்போது இது இரண்டாவதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. சில பௌர்ணமி நாளில் இந்த கடற்கரையில் நின்று கொண்டு மாலை நேரத்தில் கதிரவன் மேற்கு கடலில் மறைவதையும், முழு நிலவு கிழக்கு கடலில் எழுவதையும் ஒன்றாக காண்பது சிறப்பானதாகும்.

இந்த கோயிலில் திருமணம் விரைவில் கைகூட கன்னிகா பூஜை மற்றும் சுயம்வர பூஜை நடைபெறுகிறது. அதேபோல் காசிக்கு செல்பவர்களுக்கு மோட்சம் கிடைக்க வேண்டுமென நினைத்தால் அவர்கள் கன்னியாகுமரிக்கு வர வேண்டும் என புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இங்கு நீராடினால் பாவம் தொலைந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இந்த பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஒன்பதாவது நாள் தேர் திருவிழாவும். பத்தாவது நாள் தெப்ப திருவிழாவும் நடைபெறும். பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேறியவுடன் அம்மனுக்கு விளக்கு போடுதல், புடவை சாற்றுதல், அன்னதானம் செய்தல் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். வாய்ப்பிருப்பவர்கள் இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)