சிறுவனுக்கு கத்திக்குத்து.. தலைமைக் காவலர் வெறிச் செயல்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி

Thoothukudi Crime News : தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுவனுக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. தலைமைக் காவலர் சிறுவனை கத்தியால் குத்தியதாக அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பைக்கில் வேகமாக சென்றதால் ஏற்பட்ட தகராறில், சிறுவனுக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுவனுக்கு கத்திக்குத்து.. தலைமைக் காவலர் வெறிச் செயல்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி

மாதிரிப்படம்

Updated On: 

08 Oct 2025 07:29 AM

 IST

தூத்துக்குடி, அக்டோபர் 08 : தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவனை தலைமைக் காவலர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்திருநகரி மாட வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (22). இவரது சித்தப்பா மகன் அர்ஜுன் (16). இவர் நாசரேத்தில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன் (40). இவர் ஏரல் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், 2025 அக்டோபர் 7ஆம் தேதியான நேற்று தனது குழந்தைகளைபள்ளிக்கு அனுப்புவதற்காக ஆழ்வார்திருநகரி பேருந்து நிலையத்தில் சிவனேசன் நின்று இருக்கிறார்.

அப்போது, செந்தில் ஆறுமுகம் அந்த வழியாக பைக்கில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சிவனேசன பள்ளிக் குழந்தைகள் செல்லும் இடத்தில் வேகமாக செல்லக் கூடாது என செந்தில் ஆறுமுகத்தை பார்த்து கண்டித்துள்ளார். இதில், அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் சிவனேசன் தன்னை தாக்கியதாக உறவினர்களிடம் கூறியிருக்கிறார். இதனை அடுத்து, சிறுவன் அர்ஜுன் உள்ளிட்ட அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, அங்கு இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, சிறுவன் அர்ஜுனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் அர்ஜுன் வயிற்றில் கத்தி உடைந்து உள்ளே சிக்கியது.

Also Read : திருமணம் செய்வதாக மோசடி.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

சிறுவனுக்கு கத்திக்குத்து

இதனால், வலி தாங்க முடியாமல் அர்ஜுன் அலறி துடிக்கவே, உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கத்தியை வெளியே எடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆழ்வார் திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அடுத்து, தலைமைக் காவலரிடம் விசாரணை செய்தனர்.

Also Read : அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் – இந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் – எப்படி பாதுகாத்துக்கொள்வது?

அதில், சிவனேசன் கையில் வைத்திருந்த தனது பைக் சாவியில் இணைக்கப்பட்டிருந்த பாக்கெட் கத்தியால் சிறுவன் அர்ஜுன் குத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, தலைமைக் காவலர் சிவனேசன் கைது செய்யப்பட்டார்.  தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. சிறுவன் அர்ஜுன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட சிவனேசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  சிறுவனை தலைமைக் காவலர் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.