Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இனி நோயாளிகள் அல்ல… மருத்துவ பயனாளிகள் – தமிழக அரசு அறிவிப்பு

Healthcare Policy Update: தமிழ்நாடு அரசு சார்பில் இனி மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வருபவர்களை நோயாளிகள் என அழைக்காமல் மருத்துவ பயனாளிகள் என அழைக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சில மாதங்களுக்கு முன் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி நோயாளிகள் அல்ல… மருத்துவ பயனாளிகள் – தமிழக அரசு அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Oct 2025 21:58 PM IST

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் குறிப்பாக பெயர்களில் சீர்திருத்தங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக துப்புரவு பணியாளர்கள் என்பதை தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் என்பது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பெயர்களை மாற்றம் செய்யப்பட்டது. இப்படி பெயர் மாற்றப்படுவது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல கடந்த ஜூலை, 2025ன் போது ஏழை மாணவர்களுக்கான அரசு விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என பெயர் மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) உத்தரவிட்டார். மேலும் ஊர் பெயர்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் ஆதரவு மற்றும் எதிர்ப்புகளும் கிளம்பின. இந்த நிலையில் நோயாளிகள் இனி மருத்துவ பயனாளிகள் என அழைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இனி நோயாளிகள் அல்ல

மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் மக்களை இனி நோயாளிகள் என அழைப்பதற்கு பதிலாக, மருத்துவ பயனாளிகள் என அழைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் வெளியிட்ட அரசாணையில் பயனாளி என குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தீபவாளிக்கு மக்கள் ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எப்படி முன்பதிவு செய்வது? விவரம் இதோ

இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் சேவைகளைப் பெற வருபவர்கள் ‘நோயாளிகள்’ என அல்லாமல் ‘மருத்துவப் பயனாளிகள்’ என குறிப்பிடப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் ஒரு மனிதநேயம் மிக்க சேவையாக உள்ளதால், “நோயாளி” என்ற சொல்லுக்கு பதிலாக “பயனாளி” என குறிப்பிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கனமழை எதிரொலி…. மாணவர்களின் பாதுகாப்புக்கு கடைபிடிக்க வேண்டிய 6 அறிவுரைகள் – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

‘மருத்துவ பயனாளிகள் என சொல்லுங்கள்’

இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 2, 2025 நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், மருத்துவர்களையும், மருத்துவமனையையும் நாடுபவர்களை நோயாளிகள் என்று அழைக்காமல் மருத்துவப் பயனாளிகள் என்றழைக்க வேண்டும். மருத்துவ பயனாளிகள் என்றழைக்க வேண்டும். அதே போல மருத்துவ முகாம்களுக்கு வருபவர்களை குடும்பத்தாரை கவனித்துக்கொள்வது போல் அக்கறையுடன் பரிவுடன் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசியிருந்தார்.  இந்த நிலையில் தான் அவர் தான் பேசியதை அக்டோபர் 7, 2025 அரசாணையாக வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.