தண்டவாள பராமரிப்பு.. விருதுநகர் – திருச்சி ரயில் சேவையில் மாற்றம்!
தண்டவாள பராமரிப்பு காரணமாக திருச்சி வழியாக செல்லும் ரயில்களின் வழித்தடங்கள் அக்டோபர் 8 முதல் 14, 2025 வரை மாற்றப்பட்டுள்ளன. செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி, குருவாயூர் செல்லும் பகல் நேர ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை சரிபார்த்துக்கொள்ள தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு, அக்டோபர் 7: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த மாற்றமானது 2025 அக்டோபர் 9ம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வண்டி எண் 16848 செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் வழியாக திருச்சி வந்து பின்னர் மயிலாடுதுறைக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் வழக்கமான பாதையான கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக இயங்காது.
இதே போல் வண்டி எண் 16352 நாகர்கோவில் – மும்பை சிஎம்டிஎம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் அக்டோபர் 12ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதிகளில் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும். மேலும் வண்டி எண் 12666 கன்னியாகுமரி – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் அக்டோபர் 11ஆம் தேதி விருதுநகரிலிருந்து மேற்குறிப்பிட்ட பாதையில் இயக்கப்பட்டு திருச்சி செல்லும். இந்த இரண்டு ரயில்களும் மேற்குறிப்பிட்ட நாட்களில் மதுரை திண்டுக்கல் வழியாக செல்லாது.
இதையும் படிங்க: தீபாவளிக்கு ஊருக்கு போக ரெடியா? கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எங்கெங்கு?
அதேபோல் குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் அக்டோபர் 8ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை இரவு 11:15 மணிக்கு புறப்பட்டு விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்லும். அந்த நாட்களில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை வழியாக செல்லாது.
அதேபோல் அக்டோபர் 10ஆம் தேதி காலை 5.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத் செல்லும் சிறப்பு ரயில் மேற்குறிப்பிட்ட பாதையில் இயக்கப்பட்டு திருச்சி வந்து செல்லும். அன்றைய நாளில் மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் ரயில் நிலையங்களுக்கு செல்லாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீபவாளிக்கு மக்கள் ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எப்படி முன்பதிவு செய்வது? விவரம் இதோ
மேலும் அக்டோபர் 9ம் தேதி மற்றும் 16ஆம் தேதி மதுரையிலிருந்து பகல் 12.05 மணிக்கு இயக்கப்படும் மதுரை பீகானீர் அனுவ்ராத் அதிவிரைவு ரயில் 25 நிமிடங்கள் தாமதமாக 12:30க்கு புறப்படும். திருச்சியில் இருந்து காலை 7:05க்கு புறப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வரும் அக்டோபர் 8ஆம் தேதி முதல் 10ம் தேதி வரையும், 13ஆம் தேதியும் மானாமதுரை – ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயில் ராமேஸ்வரம் செல்லாது. மேலும் இதே நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்சி எக்ஸ்பிரஸ் மானாமதுரையில் இருந்து மாலை 4:55 மணிக்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள ரயில் பயணிகள், திட்டமிட்டுள்ளவர்கள் தங்கள் பயணத்திற்கு ஏற்ப முடிவுகளை செய்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.