AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புற்றுநோய் மருந்துகளின் விலை குறைய வாய்ப்பு: விற்பனை லாப வரம்புக்கு 30% உச்சவரம்பு – ஆண்டுக்கு ரூ.2,500 கோடி சேமிக்கலாம்

அரசு நிர்ணயித்த விலை உச்சவரம்புக்குள் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. தற்போது, அந்தப் பட்டியலில் இடம்பெறாத பிற புற்றுநோய் மருந்துகளுக்கும் விற்பனை லாப வரம்பைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் (DGHS) கீழ் செயல்படும் நிபுணர் குழு, இந்தக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் மருந்துகளின் பட்டியலை இறுதி செய்யும்.

புற்றுநோய் மருந்துகளின் விலை குறைய வாய்ப்பு: விற்பனை லாப வரம்புக்கு 30% உச்சவரம்பு – ஆண்டுக்கு ரூ.2,500 கோடி சேமிக்கலாம்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Oct 2026 10:24 AM IST

அக்டோபர் 9, 2026: புற்றுநோயாளிகளின் சிகிச்சைச் செலவைக் குறைக்கும் நோக்கில், அட்டவணையில் இடம்பெறாத புற்றுநோய் மருந்துகளின் விற்பனை லாப வரம்பை அதிகபட்ச சில்லறை விலையில் (MRP) 30 சதவீதமாகக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சில மருந்துகளின் விலை 70 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும், நோயாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.2,500 கோடி வரை சேமிப்பு கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

அரசு நிர்ணயித்த விலை உச்சவரம்புக்குள் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. தற்போது, அந்தப் பட்டியலில் இடம்பெறாத பிற புற்றுநோய் மருந்துகளுக்கும் விற்பனை லாப வரம்பைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் (DGHS) கீழ் செயல்படும் நிபுணர் குழு, இந்தக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் மருந்துகளின் பட்டியலை இறுதி செய்யும். இதையடுத்து, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) முடிவெடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.

சில மருந்துகளின் விலை 700% வரை உயர்வு

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் சுமார் 60 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்காக நோயாளிகளும் குடும்பத்தினரும் கணிசமான தொகையைச் சொந்தமாகச் செலவிட வேண்டியுள்ளது.

NPPA நடத்திய சந்தை ஆய்வில், அட்டவணையில் இடம்பெறாத புற்றுநோய் மருந்துகளின் விலை, விநியோகச் சங்கிலியில் சராசரியாக 170 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாகவும், சில மருந்துகளில் இந்த உயர்வு 700 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சில்லறை மருந்தகங்கள், மருத்துவமனை மருந்தகங்கள் மற்றும் இணையவழி மருந்தகங்களில் ஒரே மருந்தின் விலையிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும் நோயாளிகள் தரப்பினரும் அதிக விலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

2019-ம் ஆண்டு நடவடிக்கையின் தொடர்ச்சி

கடந்த 2019-ம் ஆண்டு, 42 வகையான புற்றுநோய் மருந்துகளின் விற்பனை லாப வரம்பை NPPA கட்டுப்படுத்தியது. இதனால் 526 மருந்து பிராண்டுகளின் அதிகபட்ச சில்லறை விலை 91 சதவீதம் வரை குறைந்ததாகவும், ஆண்டுக்கு ரூ.984 கோடி சேமிப்பு கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, தற்போது கூடுதல் மருந்துகளுக்கும் விலைக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மருந்து உற்பத்தி தொடரவும் உத்தரவு

விலைக் கட்டுப்பாட்டால் மருந்துகளின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் தற்போதைய உற்பத்தி அளவைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பிராண்டட் மற்றும் ஜெனரிக் மருந்துகள், உள்நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகள், இறக்குமதி செய்யப்படும் மருந்துகள், காப்புரிமை பெற்றவை மற்றும் காப்புரிமை பெறாதவை எனப் பல வகையான புற்றுநோய் மருந்துகளுக்கும் பொருந்தும். இதன் மூலம் மருந்துகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதுடன், நோயாளிகளின் சிகிச்சைச் செலவையும் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

Follow Us