Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாமகவில் ஜி.கே.மணியின் மகனுக்கு புதிய பதவி.. அன்புமணி தரப்பு அப்செட்

GKM Tamil Kumaran: பாமக இளைஞரணி தலைவராக ஜி.கே.எம். தமிழ்க்குமரன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சி நிறுவனர் ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பனிப்போர் நிலவும் நிலையில், இந்த நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது பாமகவின் உட்கட்சி அரசியலில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

பாமகவில் ஜி.கே.மணியின் மகனுக்கு புதிய பதவி.. அன்புமணி தரப்பு அப்செட்
ஜி.கே.எம். தமிழ்க்குமரன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 02 Oct 2025 12:14 PM IST

விழுப்புரம், அக்டோபர் 2: பாட்டாளி மக்கள் கட்சியில் மாநில இளைஞரணி தலைவராக ஜி.கே.எம். தமிழ்க்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளின் கள நிலவரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோர் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இருவரும் கடுமையாக மோதிக் கொண்டுள்ள நிலையில் கட்சி தொடர்பான நடவடிக்கைகளையும் தனித்தனியாக மேற்கொண்டு வருவதால் தொண்டர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது.

மீண்டும் பதவிக்கு வந்த தமிழ்க்குமரன்

இந்த நிலையில் தான் பாமக எம்.எல்.ஏவும், கட்சியின் மூத்த நிர்வாகியுமான ஜி.கே.மணியின் மகனான ஜிகேஎம் தமிழ்க்குமரனுக்கு ராமதாஸ் பதவி வழங்கியுள்ளார். ஏற்கனவே  தமிழ்க்குமரன் பாமகவில் இந்த பதவியை வகித்து வந்தார். அன்புமணிக்கு பாமக கட்சி தலைவராக பொறுப்பு வழங்கப்பட்ட பிறகு இந்த பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார். ஆனால் அன்புமணி தரப்பில் எழுந்த அழுத்தம் காரணமாக பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

Also Read:  பொய் சொல்லும் அன்புமணி – ராமதாஸ் குற்றச்சாட்டு

இளைஞரணி தலைவர் பதவி கடந்து வந்த பாதை

பாமக தலைவராக ஜி.கே.மணி இருந்த நிலையில் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி அந்த பதவிக்கு வர இருந்தார். இதனால் தனது பதவியை ராஜினாமா செய்த ஜி.கே.மணி தனது மகன் தமிழ்க்குமரனுக்கு இளைஞரணி தலைவர் பதவியை பெற்றுக் கொடுத்தார். ஆனால் அன்புமணிக்கும், ஜி.கே.மணிக்கும் இடையே பரஸ்பர உறவு இல்லாத காரணத்தால் தமிழ்க்குமரனுடன் அன்புமணிக்கு மோதல் ஏற்பட்டது.

இதனால் பதவி அளிக்கப்பட்ட மூன்று மாதங்களில் தான் கட்சி பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இப்படியான நிலையில்தான் 2024 டிசம்பர் மாதம் நடைபெற்ற பாமக நிகழ்ச்சியில் இளைஞரணி தலைவராக ராமதாஸின் மகள் வழி பேரனான முகுந்தன் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் தனது குடும்பத்தைச் சார்ந்த அவரை நியமனம் செய்வதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்து மேடையிலேயே கருத்து தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது.

இதனை தொடர்ந்து பதவிக்கு வந்த ஐந்து மாதங்களில் முகுந்தன் இளைஞர் அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தற்போது பாமக இளைஞரணி தலைவராக தமிழ்க்குமரன் பதவியமர்த்தப்பட்டிருக்கிறார். இதற்கான ஆணையை தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக அலுவலகத்தில் ராமதாஸ் முன்னிலையில் அவரது மகள் காந்திமதி வழங்கினார்.

Also Read: இதுவரை அன்புமணியை பற்றி தவறாக பேசியதே இல்லை ; ஜி.கே மணி உருக்கம்

ஏற்கனவே ராமதாஸூடன் மோதல் இருந்து வரும் நிலையில் ஜி.கே.எம். தமிழ்க்குமரனுக்கு பதவி வழங்கப்பட்டது தொடர்பாக அன்புமணி என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.  ஜி.கே.எம். தமிழ்க்குமரன் லைகா நிறுவனத்தின் சிஇஓ ஆக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.