அன்புமணி தொடர்பான கேள்வி…பதில் அளிக்க மறுத்த ஜி.கே.மணி!
Pmk GK Mani refuses To Answer: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த கெளரவத் தலைவர் ஜி. கே. மணி பதில் அளிக்க மறுத்து விட்டார். இதுகுறித்து வேறொரு நாள் பேசுவதாக தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தலைநகர் சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களில் சமூக நீதிக்கான ஆர்ப்பாட்டம் மற்றும் அறப்போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தை தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி. கே. மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து சமுதாயத்துக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்க
ஆந்திரா, கர்நாடகா, ஒடிஷா, தெலுங்கானா, பீகார் ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்திலும் சாதிவார் கணக்கெடுப்பை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்த சாதிவாரி கணக்கெடுப்பானது அதிகபட்சம் இரு மாதங்களில் நடத்தி முடித்து விடலாம். இதையே, நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பாமக வலியுறுத்துகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால் அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சமூக நீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு
சமூக நீதியின் பிறப்பிடமாக போற்றப்படுவது தமிழ்நாடு ஆகும். சமூக நீதிக்கு அடிப்படையே சாதிவாரி கணக்கெடுப்பாகும். அதன்படி, ஒவ்வொரு சமுதாயத்திலும் எவ்வளவு மக்கள் தொகை உள்ளது என்பதை கண்டறிய முடியும். இதில், ஒவ்வொரு சமுதாயத்திலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அரசு திட்டங்களை செயல்படுத்த முடியும்.
மேலும் படிக்க: ஈரோடு செல்லும் விஜய்…தேதி…நேரம்…குறித்த செங்கோட்டையன்!
5 ஆண்டுகள் கிடப்பில் கிடக்கும் 10.5% இட ஒதுக்கீடு சட்டம்
வன்னியர் சமுதாய மக்களுக்கு 10. 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி சட்டமாக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது வரை நிறைவேறாமல் உள்ளது. எனவே, முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அரசு வன்னியர் சமுதாய மக்களுக்கான உள் ஒதுக்கீட்டு சட்டத்தை காலம் தாழ்த்தாமல் அமல்படுத்த வேண்டும். நான் பா ம க நிறுவனர் ராமதாசுடன் 46 ஆண்டு காலம் இருப்பதை குற்றமாக நினைக்கின்றனர்.
அன்புமணி தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு
அன்புமணி தொடர்பான கேள்வி மற்றும் அன்புமணி தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விகளுக்கு ஜி.க.மணி பதில் அளிக்க மறுத்துவிட்டார். தற்போது, இது தொடர்பாக பதில் அளித்தால் சமூக நீதிக்கான போராட்டத்தின் வீரியம் குறைந்து விடும். எனவே, அன்புமணி தரப்பு தொடர்பான கேள்விகளுக்கு தனியாக செய்தியாளர்களை சந்தித்து மனதில் உள்ளதை தெரிவிப்பதாக ஜி. கே. மணி கூறினார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் வாக்கு திருட்டு மூலம் பாஜக ஆட்சியை பிடிக்க திட்டம்…தொல். திருமா அட்டாக்!



