மாணவர்களுக்கு குட் நியூஸ்…இலவச மடிக்கணினி வழங்கும் தேதி அறிவிப்பு!
Free Laptops For College Students: தமிழகத்தில் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் சுமார் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்லூரி படிப்பை முடிக்கும் இறுதி ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு உபயோகப்படும் வகையில் தமிழக அரசு சார்பில் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி , அனைத்து வகை அரசுக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச மடிக் கணினிகள் வழங்கப்பட உள்ளது. சென்னை கிண்டி அருகே உள்ள நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணிணிகள் வழங்கும் விழா வரும் டிசம்பர் 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
முதல்வர் மு க ஸ்டாலின் மடிக்கணினிகளை வழங்குகிறார்
இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு முதல கட்டமாக இலவச மடிக்கணிணிகளை வழங்கி தொடங்கி வைக்க உள்ளார். இதில், அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: 49வது சென்னை புத்தக கண்காட்சி.. ஜன. 7 முதல் 19 வரை.. எங்கே? முழு விவரம்..




யார் யாருக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்
இதேபோல, தனியார் கல்லூரிகளை பொறுத்தவரை 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், தமிழ் புதல்வன், புதுமைப் பெண் ஆகிய திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாணவ, மாணவிகளுக்கும் இலவச மடிக் கணினிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதே போல, உதவித்தொகை பெறக்கூடிய எஸ். சி., எஸ். டி., மாணவர்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் மடிக் கணினிகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிரபல நிறுவனத்தில் மடிக்கணினிகள்
இந்த மாணவ, மாணவிகளுக்கு DELL, ACER, HP ஆகிய பிரபல நிறுவனங்களிடமிருந்து மடிக் கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் சுமார் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்வில், உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், கல்வித் துறை செயலாளர் சங்கர் ஐ ஏ எஸ் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மடிக் கணினிகள் எப்போது வழங்கப்படும் என்று கல்லூரி மாணவ, மாணவிகள் எதிர்பார்த்து வந்தனர். அவர்களுக்கான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: சாலைகளில் குழந்தைகளை வைத்து யாசகம்.. அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!