திருச்சி – சென்னை விமான கட்டணம் ரூ.41,000 – இண்டிகோ விமானம் ரத்தால் மளமளவென உயர்வு – பயணிகள் கடும் அவதி
IndiGo cancellations impact : இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் டிக்கெட் கட்டணங்களை திடீரென உயர்த்தியுள்ளன. குறிப்பாக சென்னையில் இருந்து திருச்சி செல்ல கட்டணமாக ரூ.41,000 ஆக உயர்ந்துள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அது குறித்து பார்க்கலாம்.
சென்னை, டிசம்பர் 5: இண்டிகோ (Indigo) விமான சேவைகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டதால், சென்னையிலிருந்து பல முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்தது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்ட பணியாளர் பற்றாக்குறை, நிர்வாக சிக்கல்கள் ஆகியவற்றின் காரணமாக சென்னை உட்பட இந்தியாவின் பல விமான நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இண்டிகோ நிறுவனம் முறையாக தகவல் தெரிவிக்காததால் பயணிகள் பல மணி நேரங்கள் விமான நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதன் ஒரு பகுதியாக, டிசம்பர் 5, 2025 நான்காவது நாளாக சென்னை விமான நிலையத்திலும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், மற்ற விமானங்களின் கட்டணங்கள் மளமளவென உயர்ந்தன.
திருச்சி – சென்னை விமான கட்டணம் ரூ.41,000
இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் டிக்கெட் கட்டணங்களை திடீரென உயர்த்தியுள்ளன. குறிப்பாக சென்னையில் இருந்து திருச்சி செல்ல கட்டணமாக ரூ.41,000 ஆகவும், சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல ரூ.55,000 ஆகவும், சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல ரூ. 17,000 ஆகவும், சென்னையில் இருந்து கொச்சின் செல்ல ரூ.27,000 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் கூட்டத்தை பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.




இதையும் படிக்க : “சட்டத்தை மதிக்காத ஆட்சியை தொடரவிடக்கூடாது”.. நயினார் நாகேந்திரன் சூளுரை!!
இன்று நள்ளிரவு வரை விமானங்கள் இயங்காது
இந்த நிலையில் இண்டிகோ விமான நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, டிசம்பர் 5, 2025 இன்று நள்ளிரவு 12 மணி வரை விமானங்கள் இயங்காது எனவும், டிசம்பர் 6, 2025 அன்று விமானங்கள் இயங்குமா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பயணிகள் கவலை
#WATCH | Chennai | An IndiGo passenger says, “My flight is cancelled, and the fare for other flights is too high. The airline is not even providing food or accommodation to the passengers.” pic.twitter.com/u4d3NoWz1S
— ANI (@ANI) December 5, 2025
இதையும் படிக்க : சென்னையில் மட்டும் 39 விமானங்கள் ரத்து… பயணிகள் அவதி – காரணம் என்ன?
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கான சரியான தகவல் அளிக்கப்படாததால், பயணிகள் பலர் கடும் கோபத்துடன் விமான நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலும் வேறு விமானத்தில் பயணிக்க அனுமதிக்குமாறும் இல்லையென்றால் கட்டணத்தை திருப்பி தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களை விமான நிலைய அதிகாரிகள் சமாதானப்படுத்த முயன்றதால் அங்கு சலசலப்பு நிலவியது.