AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மேகதாது அணை விவகாரம்.. டி.கே சிவகுமாரின் ஆணவப்போக்கு – முதல்வர் விஜய் வாய் திறப்பாரா? கே.என். நேரு கேள்வி..

காவிரி உரிமைகளை நசைக்கும் வகையில் அமைந்துள்ள கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் பேச்சுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் இப்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டின் போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகிவிடக்கூடாது. காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடும், அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஒலிக்கின்றன என கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை விவகாரம்.. டி.கே சிவகுமாரின் ஆணவப்போக்கு – முதல்வர் விஜய் வாய் திறப்பாரா? கே.என். நேரு கேள்வி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 May 2026 20:24 PM IST

மே 24, 2026: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்று டி.கே. சிவக்குமார் கூறியிருப்பது அவரது ஆணவப் போக்கைக் காட்டுவதாக தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு விமர்சித்துள்ளார். மேலும், “மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் வாய் திறந்து பேசுவாரா என மக்கள் காத்திருக்கின்றனர்” என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேகதாதுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை ஒன்றிய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

மேகதாது அணை விவகாரம் – திமுக கண்டனம்:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் டி.கே. சிவக்குமார் கூறியிருப்பது அவரது ஆணவப் போக்கைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்துவிட்டது. பலவீனமான கூட்டணி அரசுதான் அமைந்துள்ளது என்ற எண்ணத்தில் சிவக்குமார் இவ்வாறு பேசியிருப்பது போலத் தெரிகிறது. தங்களது காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எதிர்ப்பு இருக்காது என்று நினைத்து, துடுக்குடன் வார்த்தைகளை விட்டுள்ளார்.

மேலும் படிக்க: செய்யூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.. வி.சி.கவில் இருந்து பனையூர் பாபு விலகல்..

மேகதாதுவில் அணை கட்டும் விஷயத்தில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக சிவக்குமார் கூறியிருக்கிறார். காவிரி நதியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட எங்கள் கழகத் தலைவர் எந்தவிதத் தியாகமும் செய்ய தயங்க மாட்டார்.

மேகதாது அணையை கர்நாடகம் கட்டுவது என்பது ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிற்கு இழைக்கும் துரோகம்.

முன் அனுமதி பெறாமல் கட்டுமானம் மேற்கொள்ளக்கூடாது:

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி தற்போது மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செயல்படுத்தி வருவது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் விஜய் வாய் திறப்பாரா ?

காவிரி உரிமைகளை நசைக்கும் வகையில் அமைந்துள்ள கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் பேச்சுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் இப்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகிவிடக்கூடாது. காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடும், அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஒலிக்கின்றன; ஒரே உணர்வில் இயங்குகின்றன என்பதை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தங்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக அரசுக்கு அழுத்தமாக தெரிவிக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை துவக்கத்திலேயே முறியடிக்க வேண்டும்.

இப்போதாவது, இதற்காகவாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாய் திறந்து பேசுவாரா என மக்கள் காத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Follow Us