அன்புமணிக்கு தான் பாமக தலைவர் – தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதி
EC Reaffirms Anbumani As PMK Leader : பாமக பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் 2026 ஆகஸ்ட் வரை அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக தொடர்வார் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அங்கீகரித்துள்ளதாக மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

அன்புமணி ராமதாஸ் - ராமதாஸ்
சென்னை, பிப்ரவரி 9 : பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தற்போதைய தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) ஆகியோருக்கிடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனையடுத்து கட்சியின் தலைவர் யார் என்ற அதிகாரப்போட்டியும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பாமக பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் 2026 ஆகஸ்ட் வரை அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக தொடர்வார் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அங்கீகரித்துள்ளதாக மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
பாமக தலைவர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நீதிமன்றம்
இதனையடுத்து, பாமக என்ற கட்சி பெயர், கொடி மற்றும் சின்னம் அனைத்தும் அன்புமணி தலைமையிலான பாமகவுக்கே உரியது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை எதிர்த்து, ராமதாஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், அரசியல் கட்சிகளின் உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தீர்மானம் எடுக்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதையும் படிக்க : தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு விவகாரம்…கொடூர சம்பவத்தில் மறைந்திருக்கும் மக்களின் சோக கதை!
இது ராமதாஸ் தரப்புக்கு சாதகமான தீர்ப்பாக அமைந்தது. இந்த நிலையில், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, தலைமைத் தேர்தல் ஆணையர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு பிப்ரவரி 9, 2026 அன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, கட்சி உரிமை தொடர்பான சர்ச்சை எழுவதற்கு முன், கட்சியின் ஆவணங்களின் அடிப்படையிலேயே அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரித்ததாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. இதன் மூலம், அன்புமணியை பாமக தலைவராக ஏற்கனவே அங்கீகரித்துள்ளோம் என்பதைக் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியது.
இதையும் படிக்க : கூட்டணி வாசல் கதவு திறந்திருந்தும் பயனில்லை…தேர்தலில் தனித்து களம் காணும் முடிவில் தமிழக வெற்றிக் கழகம்..ஏன் இந்த திடீர் முடிவு!
இந்நிலையில், பாமக தொடர்பான விவகாரத்தில் இம்முறை எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞரும், ராமதாஸ் தரப்பின் வழக்கறிஞரும் முன்வைத்த வாதங்களை மட்டுமே பதிவுசெய்ததாகவும், பாமக கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பதில் எந்த தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வந்த பாமக கட்சியின் தலைவர் மற்றும் சின்னம் தொடர்பான சர்ச்சைக்கு இந்திய தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.