முட்டை விலை இதுவரை காணாத புதிய உச்சம் – 50 ஆண்டுகால வரலாற்றில் இதுவே அதிகம் – காரணம் என்ன?
Egg Prices Surge : நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து சில்லறை விற்பனை கடைகளில் முட்டையின் விலை அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முட்டை (Egg) விலை வரலாறு காணாத அதிக உயர்வை எட்டியுள்ளது. நாமக்கல் (Namakkal) தேசிய முட்டை வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை மீண்டும் உயர்த்தப்பட்ட காரணத்தால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. நாமக்கல்லில் நவம்பர் 16, 2025 அன்று நடைபெற்ற தேசிய முட்டை வியாரிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பண்ணை கொள்முதல் விலை 5 பைசா உயர்த்தப்பட்டு முட்டை ஒன்றுக்கு 5 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய கோழிப்பண்ணை வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில்லறை கடைகளில் விற்கப்படும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும்.
முட்டை விலை வரலாறு காணாத புதிய உச்சம்
முட்டயின் விலை வரலாறு காணாத புதிய உச்சமாக ரூ.5.95க்கு பண்ணை கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 12 நாட்களில் மட்டும் முட்டை விலை 55 பைசா உயர்ந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகால கோழிபண்ணை வரலாற்றில் முட்டையின் விலை அதிகபட்ச விலை இதுவாகும். இதனால் எளிய மற்றும் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு இன்று முதல் 3 வேலை உணவு.. 512 இடங்களில் விநியோகம்..




ஏன் இந்த திடீர் விலை உயர்வு?
இது குறித்து கோழிபண்ணை நடத்துபவர்கள் விளக்கமளித்துள்ளனர். கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பதற்காக முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. அதே போல குளிர் காலம் என்பதால் வட மாநிலங்களில் முட்டையின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் சந்தையில் முட்டையின் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் விலையை அதிகரிக்கும் சூழ்நிலை அதிகரித்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த விலை உயர்வு சில்லறை விற்பனை கடைகளில் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த புதிய விலை உயர்வு காரணமாக சில்லறை விற்பனை கடைகளில் முட்டையின் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, சில்லறை விற்பனை கடைகளில் முட்டை ஒன்றின் விலை ரூ.7 வரை உயரலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க : நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!
முட்டை விலையும் தேவையும் அதிகரித்திருப்பதன் காரணமாக, கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பொதுமக்கள் இதனால் வெகுவாக பாதிக்கப்படுவர். நேரடியாக முட்டையின் விலை உயர்வதோடு முட்டையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளின் விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பேக்கரிகளில் கேக், பேஸ்ட்ரி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஜனவரி மாதங்களில் முட்டை விலை உயரும். ஆனால் இந்த முறை முட்டை விலை உயர்வு வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.