அரசியல் ஆதாயம் தேட கரூர் பயணம்.. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்!

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஸ்டாலினின் கரூர் பயணத்தை அரசியல் ஆதாயம் தேடும் செயல் என கடுமையாக விமர்சித்துள்ளார். 2026 தேர்தல் நெருங்கும் நிலையில், கச்சத்தீவு விவகாரம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, நிதி நிர்வாகத் தோல்விகள் எனப் பலமுனைகளிலும் திமுக அரசை அவர் சாடியுள்ளார்.

அரசியல் ஆதாயம் தேட கரூர் பயணம்.. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்!

எடப்பாடி பழனிசாமி

Updated On: 

04 Oct 2025 08:17 AM

 IST

தருமபுரி, அக்டோபர் 4: அரசியல் ஆதாயம் தேடவே முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி “மக்களை மீட்போம்.. தமிழகத்தை காப்போம்” என்ற பெயரில் தொகுதி வாரியாக  பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அக்டோபர் 3ம் தேதி தருமபுரி மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த மாவட்டத்தில் தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டசபை தொகுதிகளில் அவர் பரப்புரை மேற்கொண்டார்.  இதனிடையே பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடையே பேசிய எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய கருத்துக்கள் குறித்து விமர்சித்தார்.

அதாவது, “ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று பேசுவதற்கு முன் ஒரு முறை கண்ணாடியை பார்த்திருக்கலாம். நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியில் 39 எம்பிக்களை வைத்துக்கொண்டு அங்கு பேசாமல் இப்போது வந்து நீடிக்கண்ணீர் வடிக்கும் உங்கள் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை. கட்சத்தீவை பற்றி பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது?

இதையும் படிங்க: ஊழல் அமைச்சர்கள் தப்பிக்க மாட்டார்கள்.. எடப்பாடி பழனிசாமி உறுதி!

கச்சத்தீவை உங்கள் தந்தை கருணாநிதி தான் தாரை வார்த்தார். அன்று மத்தியில் ஆட்சியில் இருந்தது இன்று நீங்கள் கைகோர்த்து நிற்கும் கூட்டணி கட்சியான காங்கிரஸ்தான்.  கச்சத்தீவு பற்றி சண்டை போட வேண்டுமென்றால் உங்கள் கூட்டணிக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்ளுங்கள். 16 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகித்த திமுகவிற்கு எப்போது மீனவர்களின் கஷ்டம் தெரியவில்லையா?

68 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த போது கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு செல்லாத முதலமைச்சர் ஸ்டாலின் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தவுடன் உடனடியாக செல்கிறார். காரணம் எல்லாவற்றிலும் திமுக அரசியல் செய்கிறது. அதேபோல் வேங்கை வயலுக்கு ஏன் நீங்கள் செல்லவில்லை?. மேலும் மெரினாவில் விமான கண்காட்சி நடைபெற்ற போது உயிரிழந்தவர்களின் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை?.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை நீக்கம் – எடப்பாடி பழனிசாமி உறுதி

அப்படி என்றால் நீங்கள் செய்வது அரசியல் தானே?.  சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதால் தான் அவர் கரூருக்கு சென்றார். ஆட்சி நிர்வாகம், நிதி நிர்வாகம், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு,  போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துதல்,  விலைவாசியை கட்டுப்படுத்துவது என அனைத்திலும் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்து விட்டார்.

அதேசமயம் எடப்பாடி பழனிச்சாமிக்கு  கொள்கை இல்லை என ஸ்டாலின் பேசுகிறார். முதலில் திமுகவுக்கு கொள்கை இருக்கிறதா?.  இந்தியா கூட்டணி மூலம் பாஜகவை எதிர்ப்பது, மாநிலங்களில் மோதிக் கொள்வது என இருக்கிறார்கள்.  எல்லா தேர்தல்களிலும் ஒரே மாதிரி போட்டியிட வேண்டும்.  அது தான் கொள்கையுடைய கட்சி என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.