207 அரசு பள்ளிகள் மூடல்.. பதிலளிக்குமா பள்ளி கல்வித்துறை – எடப்பாடி பழனிசாமி கேள்வி..
207 Government School Closure: தமிழகத்தில் இருக்கக்கூடிய 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டதை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் உடனடியாக அந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து பள்ளிகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 13,2025: தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் அரசியல் கட்சிகள் தரப்பில் அதற்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆளும் திமுக அரசை கண்டித்து விமர்சித்து பல்வேறு கண்டன அறிக்கைகளை தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரரான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டதாக தெரிவித்து கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவை பொறுத்தவரையில் வரக்கூடிய தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ள பிரச்சார பயணத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து மக்களிடையே உரையாற்றி வருகிறார்.
207 அரசு பள்ளிகள் மூடல்:
அந்த வகையில் தற்போது தமிழக அரசின் 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது கண்டித்து கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ கடந்த நான்கு கல்வி ஆண்டுகளில், கல்வித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திவிட்டோம்; இனி நிகழ்த்துவதற்கு எந்தஒரு சாதனையும் இல்லை என்று தினமும் மார்தட்டிப் பேட்டி அளிக்கும் விடியா திமுக-வின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், இன்று தமிழகத்தில் ஒரு மாணவர்கூட சேராததால் சுமார் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்?
மேலும் படிக்க: 8ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி.. தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடரும் என திட்டவட்டம்..
இந்த துறைக்கென்று உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். வாரிசு உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவராக மட்டுமே செயல்படுவது வெட்கக்கேடானது. தி.மு.க. ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள் மற்றும் தனியார் நடத்தும் பள்ளிகளை வாழவைப்பதற்காக, தமிழகம் முழுவதும் 207 அரசுப் பள்ளிகளை மூடும் வேலையை இந்த பெயிலியர் மாடல் அரசு கனகச்சிதமாக செய்து வருவதாகவும், பள்ளிகளை மூடுவதாக அறிவித்ததன் மூலம் 207 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வந்த இடங்களை தனியாருக்கு தாரை வார்க்க முயல்வதாகவும் கல்வியாளர்கள் இந்த அரசின் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
அடிப்படை வசதிகள் இல்லை:
நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசு, கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மடிக் கணினி, தாலிக்குத் தங்கம் போன்ற நலத் திட்டங்களை நிறுத்தியதோடு, திட்டமிட்டு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல், அப்பாவி மக்களை தனியார் பள்ளிகளை நோக்கி ஓடச்செய்து விட்டு அவர்கள் மீதே பழிபோட்டு அரசுப் பள்ளிகளை மூடும் அராஜகப் போக்கை கடைபிடித்து வருகிறது. இச்செயலை, அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மேலும் படிக்க: ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவி.. நெல்லை பல்கலைக்கழகத்தில் பரபரப்பு..
207 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளது குறித்து நான் பேசியதற்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித் துறை, குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததாலும், பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதாலும், மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடுகிறோம் என்று ஒரு விரோதமான விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
மூடப்பட்ட பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும்:
இனியாவது பள்ளிக் கல்வித் துறை விழித்துக்கொண்டு, ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, மூடப்பட்ட 207 பள்ளிகளின் அருகாமையில் வசித்துவரும் மாணவர்களை, அதே பள்ளிகளில் சேர்ப்பதை ஒரு முனைப்பு இயக்கமாக மாற்றி, மாணவர் சேர்க்கையை அதிகரித்து இந்தப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.