ரூ.3 கோடிக்கு லேண்ட் ரோவர்… கேப்டன் குடும்பத்துக்கு கார் வாங்க கூட தகுதியில்லையா? ஓபனாக பேசிய பிரேமலதா!
Premalatha Vijayakanth : திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த பிறகே நாங்கள் ரூ. 3 கோடிக்கு லேண்ட் ரோவர் டிபெண்டர் கார் வாங்கியதாக பொய்யான குற்றச்சாட்டுகளா சுமத்தி வருகின்றனர் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சென்னை, கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று திங்கள்கிழமை ( மார்ச் 23) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல். கே. சுதீஷ் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: புதுச்சேரியில் தேமுதிக சார்பில் யார் போட்டியிட போகிறார் என்ற விவரம் இன்று பிற்பகல் 3 மணிக்குள் தெரிவிக்கப்படும். திமுக தலைமையிடம் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைக்கு தேமுதிகவில் 5 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான முடிவுகளை அறிவிக்கும். தேமுதிகவில் உள்ளவர்கள் கடந்த 2006 முதல் 2026 வரை பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வரிசையில் 3-ஆவது இடத்தில் தேமுதிக
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் எங்களுக்கான தொகுதிகளை பெற்று அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வரிசையில் தேமுதிக மூன்றாவது இடத்தில் உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற தேர்தல்களில் தேமுதிக 10 சதவீத வாக்கு வங்கியை பெற்றுள்ளது. 29 சட்டமன்ற உறுப்பினர்களுடன் கேப்டன் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கட்சி தான் தேமுதிக. ஆண்ட கட்சி, ஆளும் கட்சிக்கு நிகராக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பூத் கட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணி நன்றாக செல்லும் நோக்கத்தில் மற்ற கட்சிகள் விட்டுக் கொடுப்பது போல, தேமுதிகவும் ஒன்றிரண்டு தொகுதிகளை விட்டுக் கொடுக்கும். அதில், மாற்றுக் கருத்து இல்லை.
மேலும் படிக்க: Assembly Election 2026: வேட்பாளர் இறந்தால் தேர்தல் ரத்து ஆகுமா? முழு விளக்கம்




ரூ.3 கோடி மதிப்பிலான லேண்ட் ரோவர் கார்
ரூ. 3 கோடி மதிப்பில் 1.5 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய லேண்ட் ரோவர் காரை திருப்பதிக்கு எடுத்துச் சென்றால், அதை திமுகவுடன் கூட்டணி அமைத்த பிறகு தான் வாங்கி உள்ளார்கள் என்று கூறுகின்றனர். அப்படி என்றால், ஒரு கார் வாங்குவதற்கு கூட கேப்டன் குடும்பத்துக்கு தகுதி இல்லையா. கேப்டனை குடிப்பார் என்றும், அடிப்பார் என்றும், கோபப்படுவார் என்றும் தவறான பிம்பத்தை ஏற்படுத்தி மக்களிடம் கொண்டு சென்றார்களோ, அதே போல எங்கள் மீதும் குற்றத்தை சுமத்தி வருகின்றனர்.
தேமுதிக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியீடு
21 ஆண்டு கால தேமுதிக அரசியல் களத்தில் எந்த குற்றச்சாட்டும் இல்லாத காரணத்தால், தேவையில்லாத குற்றச்சாட்டுகளை எங்கள் கட்சி மீதும், கட்சியினர் மீதும் சுமத்தி வருகின்றனர். தமிழ் நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது கிடைக்கக்கூடிய வகையில் எனது தேர்தல் பிரச்சாரம் இருக்கும். விருதுநகர் தொகுதியில் ஏற்கனவே விஜய பிரபாகரன் வெற்றி அடையக்கூடிய நிலையில், அவர் வெற்றி வாய்ப்பை பறித்தது அனைவருக்கும் தெரியும். தேமுதிகவில் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
மேலும் படிக்க: Kolathur Constituency Election 2026: முதல்வர் ஸ்டாலினின் தொகுதி.. கொளத்தூரில் மக்கள் முன்வைக்கும் முக்கிய பிரச்சனைகள் என்ன?