Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

புதிய விண்ணப்பதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை எப்போது? உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

Magalir Urimai Thogai : சட்டப்பேரவையில் கூட்டத் தொடரில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், புதிய விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை டிசம்பர் 15, 2025 முதல் வழங்கப்படும் என அறிவித்தார். தற்போது இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

புதிய விண்ணப்பதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை எப்போது? உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
உதயநிதி ஸ்டாலின் - மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Oct 2025 15:06 PM IST

சென்னை, அக்டோபர் 16: தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் 14 அன்று தொடங்கி  நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு, கிட்னி திருட்டு வழக்கு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக கரூர் வழக்கு குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே, 41 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்றார். இந்த நிலையில் அக்டோபர் 16, 2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில், துணை முதல்வரும் இளைஞர் நலத்துறை, விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

‘இந்தியாவே திரும்பி பார்க்கும் திட்டம்’

இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியதாவது, ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த செப்டம்பர் 15, 2023 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் மகளிர் பொருளாதார தன்னிறைவும், குடும்பங்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இதுவரை 1 கோடி 16 லட்சம் பெண்களுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்பட்டது.

இதற்காக மொத்தம் 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ஒவ்வொரு பெண்ணுக்கும் இதுவரை ரூ.26,000 வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தகுதியுள்ள பல பெண்கள் இந்த திட்டத்தின் நன்மைகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சில நிபந்தனைகளை தளர்த்தியுள்ளார். இதற்காக உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் கிராமப்புற, நகர்ப்புறங்களில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.

புதிய விண்ணப்பதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை எப்போது?

இதுவரை மொத்தம் 9,055 முகாம்கள் நடைபெற்றுள்ள நிலையில், 28 லட்சம் பெண்கள் புதிதாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். தற்போது இந்த விண்ணப்பங்கள் குறித்து வருவாய் துறை ஆய்வு செய்து வருகின்றன. இந்த ஆய்வு பணிகள் வருகிற நவம்பர் 30, 2025 அன்றுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15, 2025 முதல் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்றார். மேலும் தமிழ்நாடு பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தன்னிறைவுக்கும் திராவிட மாடல் அரசு எப்போதும் துணையாக நிற்கும் என்றார்.

இதனையடுத்து டிசம்பர் 15, 2025 அன்று முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது உறுதியாகியிருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை பெண்களுக்கு அவர்களின் பொருளாதார சுமையை குறக்கும் வகையில் அமைந்துள்ளதாக இந்த திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் கல்வியின் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தெலங்கானாவில் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.