Tamil Nadu Rains: வங்கக்கடலில் உருவாகும் புயல்.. இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை…
Rainfall Alert/ Orange Alert: அக்டோபர் 24ஆம் தேதியான இன்று, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 24, 2026: அக்டோபர் 23ஆம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இந்த அமைப்பு, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
வங்கக்கடலில் உருவாகும் புயல்
அக்டோபர் 26ஆம் தேதி காலை மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் மேலும் வலுப்பெற்று அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
இதற்கிடையே, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதிகளில் சுமார் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டலச் சுழற்சியிலிருந்து, கேரளா வழியாக வட தமிழகக் கடலோரப் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இந்த வானிலை அமைப்புகளின் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அக்டோபர் 24: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
அக்டோபர் 24ஆம் தேதியான இன்று, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணியின் மகள் – விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்
மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 25: பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
அக்டோபர் 25ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நெருங்கும் தீபாவளி – தமிழகம் முழுவதும் 45 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை
அக்டோபர் 26 முதல் 29 வரை மழை தொடரும்
அக்டோபர் 26ஆம் தேதியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர வாய்ப்புள்ளது. அக்டோபர் 27ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து அக்டோபர் 29ஆம் தேதி வரை தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இன்றைய தினம் பகல் நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை சுமார் 32 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.